முள்ளிவாய்க்கால் அஞ்சலி நடந்து முடிந்தாகிவிட்டது. தமிழுணர்வாளர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டிதீர்த்துவிட்டார்கள்.
முத்தாய்ப்பாக நாம் தமிழர் இயக்கம் துவங்கப்பட்டிருக்கிறது. தமிழனுக்காக மட்டுமாம். எல்லா அரசியல் கட்சிகளையும் அப்புறப்படுத்தப்போகிறாராம்.
இந்த சீமான் தென் மாவட்டத்துக்காரர். கிறித்துவ தலித்தாம். அப் பகுதியில்தான் தலித்துகளுக்கெதிரான கொடுமைகள் அதிகம். அண்மையில் கூட அம்பலக்காரர்வீட்டு சாவுச் செய்தி சொல்ல/ சாவுக்கு பறையடிக்க மறுத்த ஒரு தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டார். அது பற்றியெல்லாம் வாய் திறப்பதில்லை மனிதர். விடுதலைப்புலிகளுக்காக வீரமுழக்கமிடுபவர் இதுவரை ஒருமுறை கூட தலித் மக்கள் பற்றி பேசியது கிடையாது.
வகை தொகையின்றிப் பேசுவார். கடந்த ஆண்டு சென்னையில் அவர் பேசிய ஒரு பொதுக்கூட்ட ஒளிப்பதிவிலிருந்து:
http://www.youtube.com/watch?v=x7LUNHL4rZg
இளைஞர்களின் விசில் முழக்கத்தின் மத்தியில் முண்டாதட்டிக்கொண்டு இவர் பேசுவதைக் கவனியுங்கள்.
பிரபாகரன் மறைந்துவிட்டார். தமிழினம் சொல்லொணாத் துயருக்கு, இதுவரை கண்டிராத அவலங்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. நாம் ஏன் அன்னியப்பட்டோம், லட்சக்கணக்கில் சிவிலியன்கள் கொல்லப்பட்டும், மாதக்கணக்கில் விலங்குகள் போல தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டும் பெரிய அளவில் அழுத்தம் வரவில்லையே, பாதி ஈழமே கொடுக்க முன்வந்தார் ஒரு கட்டத்தில் சந்திரிகா, இப்போதோ அதிகாரப் பரவல் என்பதே வெறுங்கனவாகிவிட்டது, ஏன் இப்படி என்றெல்லாம் கேள்வி கேட்பதில்லை. மாறாக விடப்போவதில்லை, தியாகம் வீணாகாது என்ற சூளுரைகள்.
இன்று இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்கள்கூட பேச அஞ்சுகின்றனர். ராஜபக்சே குடும்பத்தின் சர்வாதிகாரம் எல்லோரையும் குலை நடுங்கவைக்கிறது. புத்த பிக்குகளே ஆடிப்போய்விட்டனர். பொன்சேகாவிற்கு நடந்தைவிடவா?
அண்டைநாடான பர்மாவில் நடப்பதைப் போன்று ஆண்டாண்டுகளுக்கு யதேச்சாதிகார ஆட்சி நடத்தலாம் என்று மஹிந்தா கணக்குபோடுவது போலத் தெரிகிறது.
அமெரிக்கா/பிரிட்டனுக்கெதிராக சீனா, இந்தியாவிற்கெதிராக சீனா பாகிஸ்தான் என்று நிறுத்தி மற்றவர் வாயை அடைத்து கொடுங்கோலாட்சியை தடையில்லாமல் நடத்தத் துவங்கியிருக்கிறார்.
சீனத் தொழிலாளர்களுக்கும் சிங்களத் தொழிலாளர்களுக்குமிடையே மோதலாம். தொழிற்சங்கங்கள் மிரண்டுபோய் இருக்கின்றன.
Libyan land grab of Mali’s rice-producing land
farmlandgrab.org
இந்நிலையில் என்ன செய்யலாம், செய்யவேண்டும், எப்படி பாதிக்கப்பட்ட சிங்களர்களுடன் கைகோர்த்து மஹிந்தாவை எதிர்த்துப் போராடுவது, இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்துவது, இதுபற்றியே நாங்கள் சிந்திக்கவேண்டும் என்கின்றனர் ஒரு சில அறிவுஜீவித் தமிழர்கள்.
ஆனால் இனப்பற்றாளர்கள் ஆத்ம பரிசோதனை எதுவும் செய்துகொள்வதில்லை. நாம், நாம் ஆதரித்த இயக்கங்கள், தலைவர்கள், தவறேதும் செய்யவில்லை, நாம் வென்றால் அது நமது சாதனை, தோற்றால் அது மற்றவர்களின் சதி, இந்த சிந்தனை பிரபாகரன் அபிமானிகளை மட்டுமல்ல, தீவிரப் பற்று கொண்ட எவரையுமே பீடிக்கும் ஒரு நோய்.
அண்மையில் ஃப்ரண்ட்லைனில் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் பங்கு பற்றி ஒரு கட்டுரை. கம்யூனிசம், சோஷலிசம் எல்லாம் ஒழிந்துபோய் குரூரமான ஒரு முதலாளித்துவத்தை இயக்கிவரும் புட்டின் ஸ்டாலின் தலைமைக்கு வாழ்த்து சொல்கிறார், அவரைப் பற்றி விமர்சனம் எதுவும் இல்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஸ்டாலின் வழிகாட்டுதல் பற்றி மெய்மறந்து சிலாகிக்கிறார் கட்டுரையாளர், ஆனால் அப்போது நடந்த தவறுகள், பல்வேறு பகுதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், இதைப்பற்றியெல்லாம் ஒரு வார்த்தை இல்லை.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் செம்மொழித் தமிழுக்கு செய்ய வேண்டியது என்ன? – மாநிலக் கருத்தரங்கம்
செயற்பிரகடனம் வெளிட்டுரை:
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர்
இத் தமிழ்ச் செல்வன் தான் அண்மையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தோழர் டபிள்யூ.ஆரை அசிங்கப்படுத்தி கட்டுரைகள் எழுதி, தனது கட்சி விசுவாசத்தை பிரகடனப்படுத்தியவர். பெருமிதமாக வலம் வருகிறார். அவருக்கு கட்சிவட்டாரங்களில் மதிப்பும் கூடுகிறது.
கடுமையான நடவடிக்கை எடுத்து வரதராசனை மனம் நோகச் செய்த வாசுகிக்கு அகில இந்திய அளவில் சி.பி.எம் மில் முக்கிய பதவி.
டபிள்யூ ஆர் மீதான ‘புகார்களை’ விசாரித்த குழுவில் பணியாற்றிய ஏ.கே.பத்மநாபன் சி.ஐ.டி.யூவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது நபருக்கு என்ன பரிசு என்று இன்னமும் தெரியவில்லை.
அக்குழுவினர் மீது கட்சியின் கீழ்மட்டத்தில் கடும் அதிருப்தி என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் டபிள்யூ ஆர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்ட அன்று கதறி அழுதவர்கள் இன்று மௌனமாகிவிட்டார்கள். கட்சி முக்கியமாம். மாவோயிஸ்டுகள் பகுதியில் குண்டுமழைபொழியுங்கள் என்று மனித நேயத்தோடு பரிந்துரை செய்யும் கட்சி அல்லவா அது?
நம்மைத்தாண்டி நம்மைச் சுற்றியுள்ள அவலங்களை பற்றி, அநீதிகளைப் பற்றி அக்கறை கொள்பவர்கள்தான் ஆர்வலர்களாக ஆகிறார்கள். ஆனால் அவர்களே, அவர்கள் ஆதரிப்பவர்கள் கொடுமைகள் இழைக்கும்போது அவற்றை நியாயப்படுத்துவதேன், மௌனியாக இருப்பதேன்?
மனித மன செயல்பாடுகளை உளவியல் வல்லுநர்கள்தாம் விளக்கமுடியும். என்னைப் பொறுத்தவரை double standards, நமக்கொரு நீதி, அடுத்தவனுக்கொரு நீதி என எண்ணும் போக்கே எல்லாவித புரட்சிகர இயக்கங்களும் நசித்துப் போவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
எப்படியாயினும் பிரமையில் ஆழ்ந்திருப்பவர்களும் கயவர்களும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள், உண்மையான மனிதநேயர்கள் அமைதி காக்கக்கூடாது. புரட்டல்வாதங்களுக்கெதிராக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யவேண்டும். அதுவே புது யுகம் பிறக்க வழி.
Filed under: Communist Party of India (Marxist), Prabhakaran, Prakash Karat, Sri Lanka | Tagged: Frontline, Mullivaaikkaal, Seeman, Stalin, W.R. | Leave a comment »