மல்டிப்ளெக்ஸில் திளைக்கும் அங்காடித்தெரு

 

மல்டிப்ளெக்ஸ்கள், மால்கள் இவையெல்லாம் நுகர்வோர் கலாச்சார சகதியில் விழுந்து புரளும் நடுத்தரவர்க்கத்தினரின் சுவர்க்கம்.

தெருமுனை மளிகைக் கடைகளை விழுங்கும் சூப்பர்மார்க்கெட்டுகள் உலகமயமாதல் எனும் அரக்கனின் ஒரு பரிமாணம் என்றால், நம்மை அதிரவைக்கும் இன்னொரு கோர முகம் இம்மல்டிப்ளெஸ்கள்.  ராம் தியேட்டர், ஸ்ரீனிவாசா, ஏன்  ஆனந்த் கூட நிர்மூலமாகிக்கொண்டிருக்கின்றன. இப்படி கவலைப்படுகின்றனர் ஆர்வலர்கள் – இவர்களுக்கு , கவலைப்படுவதைத்தவிர வேறு வேலை என்ன என்று சொல்வோர் பலர், அது வேறு!

அப்படிக் கவலைப்படுவோர் சில வாரங்களாக சிலாகிப்பது வசந்தபாலனின் அங்காடித்தெருவை. சரவணா ஸ்டோர்ஸ் விபத்துக்கள், கொடுமைகள் அடிக்கடி அரசல் புரசலாகப் பேசப்படும், கோடிட்டு காட்டப்படும் ஊடகங்களில். அவ்வளவே. பெரிதாக எதுவும் நடந்துவிடாது. சலுகைவிலையில் கிடைக்கும் புடவைகளுக்காகவும், மற்ற பல பொருட்களுக்காகவும் அங்கு செல்லும் கூட்டம் குறைவதில்லை.

அப்படிச் செல்லும் மனிதர்களையும் உலுக்கும் படம் அங்காடித்தெரு என பலர் கூறுகின்றனர், சகிக்கவில்லை என்று சாருநிவேதிதா உள்ளிட்ட சிலர் சொன்னாலும்.

இப்போது அந்த வசந்தபாலன், சமூகத்திற்கு செய்தி சொல்ல விரும்பும் இயக்குநராகக் காட்டிக்கொள்ளவிரும்புபவர், ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், மல்டிப்ளெக்சினால்தான் அவரது படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறதாம்.

விண்ணைத்தாண்டியின் கதையும் அப்படித்தானாம். இத்தகைய மல்டிப்ளெக்ஸ்கள் காரணமாக தரமான பல படங்கள் தமிழில் உருவாகிறதாம்.

இன்று (ஏப்ரல் 18)  டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டின் சென்னைப் பதிப்பின் நகர் மலர் சென்னை டைம்ஸில் வெளியாகியிருக்கும் கட்டுரை கூறுகிறது.

 தாராளமயத்தின் காரணமாக முகிழ்த்துவரும் நடுத்தரவர்க்கம் வாழ்க்கையை முடிவில்லாத ஒரு பார்ட்டியாக, ஒரு ஐ.பி.எல் போட்டியாக பார்க்கிறது, பின் தங்கியவர்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை என்பது உண்மைதான்.  ஆயினும்,  அதன் மதிப்பீடுகள் சில மதிக்கத்தகுந்தனவாக இருக்கின்றனபோலும், சந்தை விரிவடையும்போது கலை மேம்படுகிறது, நல்ல கலைஞர்களும் உருவாகிறார்கள் – இவ்வாறு இன்னொரு பரிமாணமும் நடுத்தரவர்க்கத்தினரின் எழுச்சிக்கு இருக்கிறது எனத் தோன்றுகிறது.

அப்படியானால் அன்னம் போல, நல்ல பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து, அவலங்களை ஒதுக்கிவிடமுடியுமா? சற்றுக் குழப்பமாகத்தான் இருக்கிறது.

 ஒரு கொசுறு செய்தி – இந்தியாவிலேயே அதிகமாக படங்கள் பார்ப்பது தமிழன் தானாம். தயாநிதிக்கும் உதயநிதிக்கும் அவர்கள் சந்ததியினருக்கும் இனி ஏன் கட்சி அரசியலுக்கு வரவேண்டும் எனத்தோன்றும்?  அழகிரியே ஒதுங்கிவிடுவாரோ!

Advertisements