பாவம் நளினி, நொறுங்கிய இதழியல் நெறிகள்

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் எந்த அறத்தைப் பின்பற்றினார்கள் என்பது குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை.
அறங்களை மீறுவதென்பது மே 21ந் தேதியுடன் முடிந்துவிடவில்லை. குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குதண்டனை விதித்த நீதிபதி தனக்குத் தோன்றியபோதெல்லாம் சிரச்சேதம் என உத்திரவிட்ட Alice In Wonderland ராணியை நினைவுபடுத்தினார்.
நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க பரிந்துரை செய்த சோனியா காந்தி, நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா – இவ்விருவரே இந்த சோகக் காதையில் ஓரளவு மனிதாபிமானமுடைய நபர்களாகத் தோன்றுகின்றனர்.
சமூகத்திற்கு வழிகாட்டுவதாக சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளை வெளியிடும்போது இதழியல் நெறிகளை தொடர்ந்து  புறக்கணித்து வந்திருக்கின்றன.  நளினியின் விடுதலை கோரிக்கை குறித்து அரசின் முடிவு வெளியிடப்பட்டபோதும் இதுதான் நடந்தது.
மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு தனது செய்தியுடன் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட புகைப்படத்தை வெளியிட்டது. கொலையில் நளினிக்கும் பங்கிருந்திருக்கிறது என்பதை அவ்வாறு சுட்டிக்காட்டி, ஒன்றுமே தெரியாத அப்பாவியாக உட்கார்ந்திருக்கிறாரே கல்நெஞ்சுக்காரர், இவருக்கா கருணை என்று கேட்பதுபோல் அமைந்திருந்தது அப்புகைப்படம். டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடோ நளினி கொலைகாரியாக மாறிய வரலாற்றை எடுத்துக்கூறியது.
விடுதலை கோரிக்கை ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கு சிறை ஆலோசனைக்குழு கூறும் 8 அபத்தமான காரணங்களை, தமிழ் நாளேடுகள் எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படுத்தாமல், அப்படியே வெளியிட்டு, அரசுக்கு தங்கள் விசுவாசத்தையும், முதுகெலும்பற்ற தன்மையினையும் பறைசாற்றின.
ராயப்பேட்டையில் வாழ்வோரெல்லாம் முக்கிய புள்ளிகளுக்கும், அமெரிக்க தூதரகத்திற்குமே ஆபத்து விளைவிக்கக்கூடியவர்கள் என்ற ரீதியில் காவல்துறை ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பிக்க, ஆமாம் ஆமாம், அங்கு இப்போது வசிக்கும் தன் குடும்பத்தினருடன் போய் நளினி வாழத்தொடங்கினால் என்ன ஆவது என்று கவலைப்பட்டிருக்கிறது ஆலோசனைக்குழு. (டைம்ஸ் ஆஃப் இண்டியா பரிந்துரையின் பலவீனங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.)
நளினிக்கு விரோதமாகவே செய்திகள் அமைந்திருந்ததாக அவருக்காக வாதாடிய வழக்கிறிஞர்கள் வருத்தப்படலாம். ஆனால் நமது ஊடகங்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதுதான், தங்களுக்கு கேடு எதுவும் விளையாது என்று நினைக்கும்போதுதான் மனித உரிமை, மனித நேயம் போன்றவை குறித்து அக்கறை காட்டி வந்திருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது.
அதெல்லாம் போகட்டும், இன உணர்வு வேண்டாமா என்று தமிழ் பற்றாளர்கள் வருந்தலாம். ஆனால் இப்படி ஒரு நிலை ஏன் வந்தது? மற்றவர்களின் உரிமை மறுக்கப்பட்டபோது இதே தமிழ் பற்றாளர்கள் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் அவர்கள் சிந்திக்கலாம்.
Advertisements

இன வெறியைத் தூண்டும் ஊடகங்கள், இரையாகும் இளைஞர்கள்

பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் ஆகப்போகிறது. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் கதையாக, பிரபாகரன் புகைப்படத்தை அட்டையில் போட்டால் இதழ்கள் அதிகம் விற்கின்றன. ஆதாரமிருக்கிறதோ இல்லையோ விடுதலைப் புலிகளின் வீர தீர பராக்கிரமம் பற்றி ஏதாவது கதை சொன்னால், தமிழ் வாசகர்கள் ஆர்வமாக வாங்கிப்படிக்கிறார்கள்.
பிரபாகரன் தமிழின உணர்வின் குறியீடாகத் தொடர்கிறார். அவரது பங்களிப்பு பற்றி நடுநிலையான ஆய்வு இன்றைய தமிழ்ச் சூழலில் சாத்தியமானதாகவே தோன்றவில்லை.  ஏறத்தாழ அனைத்து தமிழ் இதழ்களும் பிரபாகரனுக்கு வாழ்த்துப் பா பாடியே தங்கள் இனப் பற்றைக் காட்டிக்கொள்கின்றன.
தமிழக அரசியல் என்றொரு வார ஏடு. வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. எல்லாம் ஜூனியர் விகடன் ஸ்டைல்தான். காரம் கூடுதல், நக்கீரன் அளவு முற்றிலும் பொறுப்பற்று, மஞ்சள் தரத்திற்கு போவதில்லை. அவ்வளவுதான்.
அந்த ஏட்டில் நடிகர் ஜெயராம் தன் வீட்டில் பணியாற்றும் பெண் குறித்து கூறிய கருத்து தொடர்பான கட்டுரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொம்பு சீவிவிடுவதில் இவர்கள்  நக்கீரனுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை.
ஒரு மலையாள சானலில் ஜெயராம் தமிழ்ப் பெண்களை இழிவாகக் கூறியதாகக்  கூறியதற்கு வறுத்தெடுத்திருந்தார்கள்.
கறுத்த, தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தன் வேலைக்காரியைப் பற்றி ஜெயராம்  கூறினாராம். இனத்துவேஷம், மொழித் துவேஷம், தண்டனைக்குரிய குற்றமாம். ஆனால் ஜெயராம் மன்னிப்புக் கேட்டுவிட்டதால், பிரச்சினை அத்தோடு விட்டுவிடப்பட்டதாம், வருந்துகிறார் கட்டுரையாளர்.
அதே நேரம்  “.., ஒரு நியாயமான காரணத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு ஜெயராம் வீட்டைத்தாக்கி, இனி தமிழனைக் கேலி செய்தால் உதை விழுமோ என்ற அச்சத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திய நாம் தமிழர் இயக்கத் தொண்டர்களை மட்டும் மறக்கவோ மன்னிக்கவோ” தமிழினத் தலைவரால் முடியவில்லையாம். தமிழனை யார் என்ன சொன்னாலும், தமிழனை அடக்கி, முடக்கி, தமிழனை இழிவுபடுத்துகிறவர்களைக் காக்கிற தாயாக விளங்குகிறாராம் கலைஞர். பொதுவாகவே மலையாளப்படங்களெல்லாம்  தமிழனை இழிவுபடுத்துவதாக பொய்ப் பிரச்சாரம் வேறு.
அப்புறம் நடிகர் அஜித்தின் மீதும் வசைபாடல். அண்மையில் ஓர் விழாவில், அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு நடிகர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என அஜித் நேரடியாகவே கருணாநிதியிடம் முறையிட்டது பற்றிக் குறிப்பிட்டு, அஜித் இலங்கைத் தமிழர் மற்றும் ஹொகேனக்கல் பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டங்களைப் பற்றித் தான் சொல்லுகிறார் என்ற முடிவுடன் குமுறுகிறார் அக்கட்டுரையாளர் ”தமிழை வைத்து சம்பாதித்தவர்கள், தமிழ்நாட்டில் தமிழோடும் தமிழனோடும் அராஜக விளையாட்டு விளையாட, அதைக் கண்டு களிப்பதே நமக்கு பிழைப்பாகிவிட்டது…என்ன பிழைப்போ…” என்று புலம்புகிறது கட்டுரை. சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு சொல்லும் அக்மார்க் விஷத்தில் தோய்த்தெடுக்கப்பட்டது.
பிரபாகரனின் மேல் ஒரு துரும்பு விழுந்தாலும் இங்கே ரத்த ஆறு ஓடும் என கர்ஜித்த வைகோவிற்கு தமிழினவாதம் ஒரு பிழைப்பு. தமிழக அரசியல் பத்திரிகை நடத்துபவரோ அதன் ஆசிரியரோ எந்த அளவு அந்த நீரோட்டத்தில் கலந்தவர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழா இன உணர்வு கொள் என்று உசுப்பேற்றிவிடுவது நல்ல வியாபார யுக்தி என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை மாபெரும் வீரர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரித்து திரைப்படம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய புகழேந்தி தங்கராஜ் இப்பத்திரிகையில் தொடர்ந்து சில பக்கங்கள் எழுதுகிறார்.
நடுத்தர வர்க்கத்தினர் ஐ.டி. கனவுகளில் மிதக்கிறார்கள் என்றால், அடித்தட்டு மக்கள் இலவசங்களில் தங்களை இழக்கிறார்கள். இன உணர்வென்பதெல்லாம் வெறும் மேடைப்பேச்சோடு நின்றுவிடுகிறது என்பது உண்மை.
இந்நிலையில் இப்படிச் செய்யப்படும் இன வெறிப் பிரச்சாரம் எதிர்கால சந்ததியினரின் ஒரு பகுதியினரை நிச்சயம் பாழ்படுத்தும். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின்  ஆபத்துக்களை உணராமல் அலட்சியமாக இருந்துவிட்ட இடதுசாரிகள், சிந்தனையாளர்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.