ஆயிரத்தில் ஒருவன்

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்த ஆயிரத்தில் ஒருவன் படம் பயங்கர எதிர்ப்பார்ப்பு களுக்கிடையில் பொங்கல் அன்று வெளியானது. படத்தை நான் முதல் நாளே பார்த்துவிட்டேன். பல இடங்களில் புரியவில்லை என்பது தவிர எனக்கு பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் படம் கிளப்பியிருக்கும் எதிர்வினைகள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனில் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்யும் சில அறிஞர்களை பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள். சோழர்களை படத்தின் இயக்குனர் செல்வராகவன் அவமானப்படுத்திவிட்டார், காட்டுமிராண்டிகளாக சித்தரித்துவிட்டார், பெண்களுடன் வல்லுறவில் ஈடுபடுவதாக காட்டுகிறார் என்று கடுமையான குற்றசாட்டுகள். அதிர்ச்சியாக இருந்தது, காரணம், படத்தில் அப்படி எதுவுமே இல்லை. பெண்களுடன் வல்லுறவில் ஈடுபடுவதாகக்காட்டுவது பாண்டிய வம்சத்தில் வந்தவர்களை. சோழர்களை செல்வராகவன் அநீதி இழைக்கப்பட்டவர்களாக, தோற்றவர்களாகவே காட்டுகிறார். எங்கிருந்து இங்கே காட்டுமிராண்டி லேபிள் வந்தது என்று தீவிரமாக யோசித்தபோதுதான் தோன்றியது, சோழர்கள் கறுப்பாக சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் காரணமாக இருக்க முடியும் என்று. சோழ மன்னர் பார்த்திபனில் தொடங்கி சோழ தேசத்தைச் சேர்ந்த அனைவரும் கறுப்பாக இருக்கிறார்கள். பாண்டியர்களை சிவப்பாகக் காட்டியிருக்கிறார். இது இயக்குனரின் உத்தியாக இருக்கலாம். படம், புனைவு என்று முதலிலேயே அறிவித்துவிடும் இயக்குனர், சோழர்களை மண்ணின் மைந்தர்களாகவும் பாண்டியர்களை ஆக்ரமிப்பாளர்களாகவும் காட்ட எண்ணியிருப்பார் (இல்லாமலும் இருக்கலாம்). ஆனால், கறுப்பாக இருப்பதாலேயே பல நல்ல குணங்கள் இருந்தாலும், அநீதிகள் இழைக்கப்படுபவர்களாக இருந்தாலும் அவர்கள காட்டுமிராண்டிகளாகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருவதற்கு காரணம்,  நமது சமூகத்தில் மிக ஆழமாக இன்னமும் அறிவுலக அளவில்கூட அசைத்துப்பார்க்க முடியாத கெட்டித்தனம் படிந்த நிற அடிப்படையிலான தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம்.

இதே போல ஆயிரத்தின் ஒருவன் படத்தின் மீது வைக்கப்பட்ட இன்னொரு விமர்சனம், ஆணாதிக்க படம் என்பது. தமிழில் எந்தப்படம்தான் ஆணாதிக்க படம் இல்லை?

படத்தில் வரும் எல்லா ஆண்களும் எப்படி பெண்களை போகப்பொருள்களாக பார்க்கிறார்கள் என்று தனது வலைப்பதிவில்  விமர்சனம் எழுதும் கொற்றவை கொதித்துப்போய் கேட்கிறார். எனக்குத் தெரிந்து இது எப்போதும் நடப்பதுதான். கூலிகளாக இருந்தாலும் சரி, கோமகன்களாக இருந்தாலும் சரி ஆண்களில் அதிகம் பேர் சந்தர்ப்பம் கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள். இதை செல்வராகவன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.

ரீமாவின் உடல் உறுப்புகளை நம்பிதான் படம் எடுத்திருக்கிறார் என்றும் கொற்றவை சொல்கிறார். இந்த படத்திலாவது ரீமாவிற்கு ஒரு காத்திரமான பங்கு இருக்கிறது. சொல்லப்போனால், படத்தின் ஹீரோ ரீமாதான். அந்த அளவுக்கு முக்கியமான கதாப்பத்திரம் அவருக்கு. தமிழில் ஊறுகாய் போல கவர்ச்சிக்காக மட்டுமே பெண்களை பயன்படுத்தும் புள்ளியிலிருந்து இந்த படம் பெரிய அளவில் மாறுபடுகிறது. ரீமாவின் கதாப்பத்திரம் தெளிவான வரையறைகளை கொண்டிருக்கிறது. அவர் தனது உடலை, தனக்கு தேவையான ஒரு பொருளை அடைவதற்கு பயன்படுத்தியிருக்கிறார். (அதை பற்றி ஒரு இடத்தில் சொல்லவும் செய்கிறார்). இதுவரை மற்றவர்களின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு, சுரண்டப்பட்டு வந்த பெண்ணுடலை ரீமா முதல் முறையாக திரையில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனது விருப்பதிற்குட்பட்டு தனது லட்சியத்துக்காக பயன்படுத்துகிறார். உடலை பயன்படுத்திதான் பொருளை அடைய வேண்டுமா என்பது வேறு கேள்வி. ஆனால் படத்தைப்பொறுத்தவரை, ரீமாவின் கட்டுப்பாட்டில்தான் அவருடைய உடல் இருக்கிறது. பெண்ணுடல் சுரண்டப்படுவது தெரியாமலேயே அதை ஆண்கள் தமக்குத் தரும் கௌரவமாக ஏற்றுக்கொள்ளும் பெண்கள் வரும் பிற தமிழ்ப்படங்களை ஒப்பிடும் போது இது மிகப்பெரிய மாற்றம், ஆறுதல்.

இன்று மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு போன்ற அதி முக்கியமான நிகழ்ச்சிகளின் மூலம் நமது வீட்டின் வரவேற்பறைகளுக்கே வராத எந்த ஆபாசத்தை ஆயிரத்தில் ஒருவனில் காட்டியிருக்கிறார் இயக்குனர்?

எல்லாவற்றையும் விட, என்னை ஒரு சேர சிரிக்கவும் வருத்தப்படவும் வைத்த ஒரு பகுதி கொற்றவையின் பதிவில் இருந்தது.

புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பாடலை ரீ மிக்ஸ் (அதற்கு சற்றும் தகுதியற்றவர்களாய்) செய்து கப்பலில் இவர்கள் பாடும் பொழுது ஒரு கும்பல் ரீமா சென்னின் மேலாடையை (கோட்) பிடித்து இழுக்கிறார்கள், முதலில் அவர்களை விரட்டும் இவர் பின்பு திறந்த முதுகை காட்டி ஆட ஆரம்பித்துவிடுகிறார்

என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் கொற்றவை.

நீங்கள் எம்.ஜி.ஆரின் மன்னிக்கவேண்டும் புரட்சித்தலைவரின் படங்களை பார்த்திருக்கிறீர்களா கொற்றவை? ஆணாதிக்கப்படங்களின் அற்புதமான உதாரணங்கள் அவை. பெண்களை அடிமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி, அவர்க்ளது உடல்களின் மீது ஆதிக்கம் செலுத்தி தனது ஆண்மையை வெற்றிகரமாக நிறுவிக்கொண்டு அதனூடாக சாதாரண, பிரக்ஞையற்ற மக்களின் பேராதரவு பெற்றவர் எம்.ஜி.ஆர். அவரது தொடர்ச்சிதான் ரஜினி, விஜய் வகையறாக்கள். இதற்கு என்னால் அவர்களது படங்களிலிருந்து ஆயிரக்கணக்கான உதாரணங்களை காட்ட முடியும். ஒரு முறை நான் வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் ஒரு கூட்டத்தில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களுக்கு பிடித்த ஹீரோக்கள் வழக்கம் போல, எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய். அவர்களது ஹீரோக்கள் எப்படி ஆணாதிக்கவாதிகள் என்பது பற்றி அவர்களிடம் பேசத் தொடங்கினேன்.  எம்.ஜி.ஆரின் ‘இப்படிதான் இருக்க வேண்டும் பொம்பள’ பாடல் பற்றியும் ரஜினியின் படையப்பாவில் வரும் ‘அதிகமா கோவப்படற பொம்பள’ வசனத்தையும் விஜயின் சிவகாசியில் வரும் ‘போலிசுன்னாலும் முதல்ல நீ ஒரு பொம்பள” என்கிற வசனத்தையும் மேற்கோள் காட்டி அவர்களிடம் பேசினேன். கூட்டத்தில் நிறைய பேர் என்னோடு ஒப்புக்கொண்டார்கள். ‘இனிமே ஜாக்கிரதையா இருப்போம்’ என்றார்கள்.

இப்படி, ஆணாதிக்கப்படங்களை இனங்கண்டுக் கொள்வது எப்படி என்பது அவர்களுக்கு தெரியாது என்று  நான் அனுமானித்துக்கொண்டு அவர்களிடம் அது பற்றி பேசியதற்கு காரணம், என்னுடைய வர்க்கப்பார்வை என்று நீங்கள் குற்றம் சாட்டினால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் உங்களுக்கு திரையில் ஆணாதிக்கம் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பது பற்றி ஆழமான புரிதல் இல்லையோ என்று நான் ஒரு வேளை சந்தேகித்தால் அது நிச்சயம் வர்க்கப்பார்வையாக இருக்க முடியாது. சக பெண்ணியவாதி பற்றிய ஆதங்கமே.

என்னைப்பொறுத்தவரை, ஒரு பெண் தனது உடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக காட்டியிருப்பதற்கும், பெண்கள் மது அருந்த மாட்டார்கள் என்பது போன்ற பெண்கள் மீது திணிக்கப்படும் குடும்ப நிறுவன பிம்பங்களை மீறியதற்காகவும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பாராட்டலாம். அதில் காட்டப்படும் ஆணாதிக்கத்திற்கும், மற்ற படங்களில் வெளிப்படும் ஆணாதிக்கத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை. சொல்லப்போனால் ஆயிரத்தில் ஒருவனில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

ஆனால் இந்த பதிவை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் ரசித்தேன் என்று சொல்ல முடியாது.

Advertisements