பென்னாகரம் பாமகவிற்கு வெற்றியா?

பா.ம.கவின் சொந்தங்கள் கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள். ஆனானப்பட்ட அ.இ.அ.தி. மு.கவையே மூன்றாவது இடத்திற்கு தள்ளி, இரண்டாவதாக வந்துவிட்டார்களாம்.

ஆனால் இந்தவெற்றியே கூட அவர்களுக்கு எதிராகத் திரும்பலாம்.ஜாதி உணர்வுகளைத் தூண்டிவிட்டால் நிச்சயம் ஓரளவு பயன் இருக்கிறது என்பதைத்தான் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். தமிழக அளவில் வன்னியர் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகள் 50க்கும் மேல் இருக்கும். சென்னை தொடங்கி பெரம்பலூர் வரை பரவலாக இந்த ஜாதியினர் வசிக்கிறார்கள்.

அவர்களெல்லோரும் பா.ம.க. ஆதரவாளர்கள் இல்லைதான். பத்தாண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்து, தமிழினத் தலைவரும் புரட்சித் தலைவியுமே பொறாமைப்படும் அளவு சொத்து குவித்துவைத்திருப்பது சாதாரண மக்களுக்கும் தெரிகிறது. இவர்களால் நமக்கு லாபமில்லை என்று உணர்கிறார்கள்.ஆயினுங்கூட் ஜாதி, சொந்தம் என்று மேடைக்கு மேடை முழங்கும்போது, “என்ன இருந்தாலும் நம்ம ஆளுஎன்று பலர் நினைக்கக்கூடும்.பத்தாண்டு காலத்தில் ராமதாஸ் குடும்பத்தைத் தவிர வன்னியர் ஜாதியைச் சேர்ந்த சில நூறு காண்ட்ராக்டர்களுக்கும் லாபம்தான். ஏதாவது அரசு அலுவலகங்களில் காரியம் ஆகவேண்டுமானால், “நானு வன்னியனுங்கன்னு சொல்லி எம்.எல்.ஏவிடம் மனுப்போடலாம். கெஞ்சிப்பார்க்கலாம். வந்த வரைக்கும் ஆதாயம்.ஒன்றுமே நடக்காவிட்டாலும் நம்ம ஜாதிக்காரன் பெரிய இடத்தில் இருக்கிறாரென்று ஒரு பெருமை படக்கூடும் அவர்கள். இம்மாதிரி நிலை பா.ம.கவிற்கு சாதகமாகத்தான் அமையும்.

பென்னாகரத்தில் தமிழ்க்குமரன் ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசினேன்.

எங்க ஜாதிக் கட்சிய்யாஅவங்களுக்குத்தான் ஓட்டு போடுவோம்என்றார்கள்.”சரி உங்க ராமதாஸ் உங்களுக்கு என்ன செய்திருக்காரு….”ஊம்….பொமபளைங்களுக்கு 33 பெர்சண்ட் சீட்டுங்கிறாரில்ல..அப்புறம்..எங்க பிள்ளைங்களுக்கு தனி கோட்டா வாங்கிக் கொடுத்திருக்காருஊம்வேணாம்யா எதுவும் செய்யவேண்டாம். நம்ம நிலச்சு நிக்கவேணாமா….கட்சி வளரட்டும்அப்றம் ஏதாவது செய்வாருநிச்சயம் செய்வேன்னு சொல்றாருல்ல…”

இதே ரீதியில்தான் பலரும் கருத்து தெரிவித்தனர்.பத்தாண்டு ஜி.கே. மணியே எம்.எல்.ஏவாக இருந்தும் தொகுதி வளர்ச்சி பெறவேயில்லை, மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பிழைப்பதற்கு பெங்களூர் போகிறார்கள், தண்ணீர் பஞ்சம், சாலை வசதி படுமோசம். இருந்தும் 40,000 வோட்டு வாங்குகிறார் ஜி.கே. மணியின் தவப்புதல்வன். அதனால்தான் நாடாளுமன்ற படுதோல்வியை ஏதோ சரிசெய்துவிட்டதுபோல் அவர்களுக்கு ஒரு பிரமை.

ஆனால் ஜாதியை வைத்துக்கொண்டு இவர்களால் ஒரு இடத்தில் கூடதனியாக போட்டியிட்டு வென்றுவிடமுடியாது. 30, 40 தொகுதிகளில் எங்கள் ஜாதியினரின் வாக்குகளைத் திரட்டமுடியும் என்று சொல்லி தனக்கென்று சில தொகுதிகளை வாங்கிக்கொள்ளலாம். பிற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்கலாம். இப்படியாக மருத்துவரய்யா பேரம் பேச வழிசெய்து கொடுத்திருக்கிறார்கள், அப்பாவி பென்னாகரம் சொந்தங்கள்.

ஆனால் பாமக அழிந்தால் மிக அதிக லாபம் திமுகவிற்குத்தான். வடமாவட்டங்களில் இரு கட்சிகளுமே வலிமையாகத் திகழ்கின்றன. பா.ம.க. வளர்ந்ததே திமுக ஆதரவு வன்னியர்களைக் கவர்ந்தே. எனவே பா.ம.கவை மீண்டும் வளரவிடக்கூடாது என்பதில் தி.மு.க. அக்கறை காட்டும். கலைஞரைவிட ஸ்டாலின்தான் எக்காரணம் கொண்டும் பா.ம.கவை கூட்டணிக்குள் விடக்கூடாது என்று நினைப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் அம்மா பக்கம் போனால், அல்லது அ.இ.அ.தி.மு.க. – விஜயகாந்த் கூட்டணி வந்தால் எதற்கும் இருக்கட்டுமே என்று தி.மு.க. ராமதாசை தன் பக்கம் வைத்துக்கொள்ளும் என்று டாக்டர் கணக்குப்போடுகிறார் என்று சொல்லப்படுகிறது.ஆனால் அழகிரி எஃபெக்டில் கதி கலங்கியிருக்கும் அம்மாதான் ராமதாசிற்கு அழைப்பு விடுவார் என்று தோன்றுகிறது. தோழர்களும் அப்படித்தான் ஆலோசனை சொல்வார்கள். என்னை டெபாசிட்டை இழக்கவைத்தவருக்கா, ஹூம் என்று ஆரம்பத்தில் உறுமினாலும், இறுதியில் அவர் இணங்கலாம்.

ஆனாலும் அப்போதுங்கூட இவ்வளவு சீட் எனக்கு வேண்டும் இல்லையெனில்என்று மிரட்டமுடியாது. ஏனென்றால் இவரால் வன்னியர் பகுதியைத் தாண்டி எந்த இடத்தில் கூட்டணியினருக்கு ஓட்டு குவிந்துவிடப்போகிறது? கொடுப்பதை வாங்கிக்கொண்டு போங்கள் என்றுதான் ராணி உத்திரவிடுவார். ராமதாசுக்கு வேறு வழி?இன்னும் சிலர் தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும் பேசிவைத்துக்கொண்டு இவரை சேர்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விட்டுவிடலாம் என்கின்றனர். அதுவும் நல்லதே. முதலில் தலித்களுடன் ஒற்றுமை என்று பேசினர். பிறகு தம் ஜாதியினரின் ஓட்டுக்காக அவர்களுக்கெதிராகத் திரும்பினர். முஸ்லீம்கள் எங்கள் சகோதரரகள் என்று முழங்கினார். பின்னர் சங்க பரிவாரத்திற்கு வாழ்த்துப் பா பாடினர். தமிழின வாதமும் பேசினார். சொந்தங்கள்தான் ஒரே புகலிடம் என்று இப்போது புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டார் ஏதோ பேரம் பேசவாவது உதவுமே. ஜெயலலிதாவுடன் கூட்டணி என்பது சொந்தத் தாயுடன் உறவு வைத்துக்கொள்வது போல என்று சொன்னவர்தானே இவர்.மிகக் குறுகிய காலத்தில் அம்பலமாகியிருக்கும் இவரும் இவரது கட்சியும் அழிவது அல்லது ஏதோ ஒட்டுக்கட்சியாக தேய்ந்துபோவதே வரலாறு வழங்கும் சரியான தீர்ப்பாக இருக்கும்.

___________________________________________________________________

பி.கு.: புத்திர சிகாமணியைப் பற்றி இங்கே பேசவேயில்லை. தேவையே இல்லை. அப்பா உழைத்தால் இவர் அமைச்சராக இருப்பாராம். இல்லாவிட்டால், எம்.பியாகக் கூட இருப்பதிலும் ஆட்சேபணையில்லையாம். ஆனால் கட்சிக்காக ஓடியாடி உழைப்பதெல்லாம் அவருக்கு சரிப்பட்டுவராதாம். எனவே ராமதாசிற்கு பிறகு, சம்பாதித்தது போதும் என்று அவர் ஒதுங்கிவிடுவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Advertisements