நளினி-முத்துலட்சுமி: பதறும் அரசு, மறுக்கப்படும் மனித உரிமைகள்

ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்ற நளினி, கணவர் வீரப்பனின் குற்றங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முத்துலட்சுமி, இருவர் நிலை குறித்தும் மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

விடுதலை செய்யப் பட்டு ராயப்பேட்டையில் தற்போது வசிக்கும் தனது குடும்பத்தினருடன் நளினி வாழத் தொடங்கினால், முக்கிய புள்ளிகளுக்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் ஆபத்து என்று ஒரு காவல்துறை ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டு சிறை ஆலோசனைக் குழு அவரை விடுதலை செய்யக்கூடாது என்கிறது.

எவ்வளவு பெரிய கொடுஞ்செயலை செய்திருக்கிறார், அவருக்கு பொது மன்னிப்பு இல்லையென்றால் அது சரிதான் என்று உயர் நீதி மன்றமும் கூறிவிட்டது. இப்போது மேல் முறையீடுதான் ஒரே வழி.

இந்நிலையில் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி ஒரு தகவலைத் தோண்டி எடுத்திருக்கிறார்.

நளினியை விடுதலை செய்யக் கூடாது என்ற தமிழக அரசின் முடிவை தெரிவிக்கும் அரசாணையில், சிறைத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது 31.07.2009 நாளிட்ட அறிக்கையில், நளினி விடுதலைக்குப் பிறகு சென்னையிலுள்ள தனது தாயார் மற்றும் தம்பியுடன் தங்கப்போகிறார், ஆனால் அப்படித் தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆக நளினி தன் குடும்பத்தினருடன் தங்குவதால் பிரச்சினை எதுவும் ஏற்படாது, எனவே அவரை விடுதலை செய்யலாம் என்று அந்த அதிகாரி தெளிவாகவே கூறுகிறார் என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது.

இந்நிலையில்தகுதிகாண்’ (competent) அதிகாரியின் இந்த அறிக்கைக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு, சிறை விதிகளில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருகிறது. அதன்படி, சிறைத் துறை அதிகாரி என்றல்ல, எவரிடம் வேண்டுமானாலும் ஒரு அறிக்கையைப் பெற்று, ஒருவரை விடுதலை செய்யலாமா வேண்டாமா, என்று அரசு முடிவு செய்யலாம்.

214-Ex-III-1a

அதன்படியே நளினி ராயபேட்டை சென்று வாழ்வதால் ஏற்படக்கூடிய சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து விசாரிக்குமாறு அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவரது அறிக்கையின் அடிப்படையில் விடுதலை மறுக்கப்படுகிறது.

நளினி நான் அங்கு செல்லப்போவதில்லை என்று சொல்லிவிட்டால் அரசின் நிலை என்ன ஆகும்? அவசர அவசரமாக சிறைவிதிகளில் திருத்தம் கொண்டுவரப்படுவானேன்? நளினியை விடுதலை செய்தால் சிக்கல் என்று சிறை அதிகாரியையே சொல்லச் சொல்லியிருக்கலாமே?

ஒன்றை கவனிக்கவேண்டும், ஒரு கட்டத்தில் நளினியை விடுதலை செய்யப்போவதாகவே முதல்வர் சூசகமாகத் தெரிவித்த்து வந்தார். எனவேயே சிறை அதிகாரியும் அப்படிச் சொன்னாரோ?

ஆனால் பிறகு  சுப்பிரமணியசாமிக்கு அல்லது காங்கிரஸ்காரர்களுக்கு பயந்து, கலைஞர் தன் நிலையை மாற்றிக்கொண்டுவிட்டாரோ? அதாவது சோனியாவே தூக்கு தண்டனையைக் குறைக்கச் சொல்லி சிபாரிசு செய்ததால், பிறகு பிரியங்கா வந்து பார்த்ததால், காங்கிரசின் மனநிலை மாறியிருக்கிறது என நினைத்திருப்பார். இந்த நேரத்தில், நளினியை விடுதலை செய்தால் தன் இனப்பற்றும் வெளிப்படும் என்றும் கணக்குப் போட்டிருப்பார்.

ஆனால் எழுஞாயிறு ராகுலோ பிரியங்காவின் அணுகுமுறையில் தனக்கு உடன்பாடில்லை என்றும் தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியாது என்றும் சொல்லிவிட்டார், தொடர்ந்து காங்கிரஸ்காரர்களெல்லாம், முண்டா தட்ட ஆரம்பித்துவிட்டனர், போதாக்குறைக்கு trouble-maker சுவாமியின் வழக்கு வேறு, எதற்கு வம்பென்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர், அதிகாரிகளும் அதற்கேற்றாற் போல் ஆணை வெளியிட்டிருக்கின்றனர்.

நமது புரிதல் சரியோ, தவறோ, வழக்கறிஞர் புகழேந்தி உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்ட, நளினிக்கு விடுதலை மறுக்கும் அந்த ஆணையை வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஆனால் முக்கிய ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்வதாக இல்லை.

நளினிக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கக்கூடும் என்று விளங்கவில்லை. ராஜீவ் கொலையில் தற்செயலாகவே அவருக்கும் ஒரு பங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அனுபவித்துவிட்டார். 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏதோ ஒரு அசாதாரண சூழலில் தன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட ஒரு நபர், தன் ஒரே மகளுடன் எஞ்சிய காலத்தைக் கழித்துவிட்டுப் போகட்டுமே, அவர் பட்ட துயருக்கெல்லாம் ஏதோ ஒரு ஆறுதல் என்று பெருந்தன்மையாக நினைக்கக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நளினியின் விடுதலையை வலியுறுத்தவேண்டிய நேரம் இது.

நளினி மட்டுமில்லை, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் கதையும் இப்படித்தான். தேவையில்லாமல் பழி வாங்கப்படுகிறார்.   ஓராண்டுக்கு மேல் தன் மகள்களைப் பிரிந்து கர்நாடக சிறையில் வாடுகிறார்.  வீரப்பன் மனைவி என்பதால் அவருக்கு ஆதரவாக அதிகமாகக் குரல்கள் எழவில்லை.

அடிப்படை மனித உரிமைகள் இந்தியாவில் பல்லாயிரக் கணக்கானோருக்கு மறுக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் நளினியும் சரி, முத்துலட்சுமியும் சரி, அவர்கள் சிறையில் இருப்பதற்கு சில அரசியல் பாசாங்குகள் காரணமாக இருக்கின்றன. ஜனநாயகமும் மனிதநேயமும் தழைக்க அத்தகைய பாசாங்குகள் உடைத்தெறியப்படவேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இவ்விருவரையும் மையப்படுத்தி உடனடியாகப் பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்.

Advertisements