நித்தியானந்தாவை விஞ்சிய ஊடகங்கள்

சாமியார்கள் இப்போது சந்தி சிரிக்கிறார்கள். சத்ய சாயிபாபா கொலை புகாரில். சங்கராச்சாரியார்கள் கொலை மற்றும் செக்ஸ் விவகாரத்தில். இப்போது நித்யானந்தா. இன்னும்  பல குட்டி, குட்டி சாமியார்கள்  பல்வேறு வழக்குக்களில். அந்த அளவில் மகிழ்ச்சியே. இவர்களெல்லாம் அம்பலமாகிறார்கள். ஆனால் பிரச்சினை என்னவெனில்,  இதனாலெல்லாம் மக்கள்  சாமியார்களை நாடிப்போவது நிற்கப்போவதில்லை.

சங்கராச்சாரிகளும் சாயிபாபாக்களும் இன்னும்  பக்தர்களை ஈர்த்தவண்ணமே இருக்கிறார்கள். கூட்டம்  சற்று குறைந்திருக்கும் அவ்வளவுதான். மக்கள் இந்த சாமியார் இல்லாவிட்டால் இன்னொரு சாமியார் என்கிறார்கள்.

இன்று சாமியார் ஆஸ்ரமங்களிலும் சாப்பாட்டுக்கடைகளிலும்தான் அப்படிக்கூட்டம். எவ்வளவு  பேர் அம்பலமானாலும், ஆலயங்கள் எந்தப் பிரச்சினைகக்கும் தீர்வளிக்காவிட்டாலும், மக்கள் சாமி கும்பிடுவதை நிறுத்தப்போவதில்லை.

அந்த அளவில் நித்தியானந்தாவை அம்பலப்படுத்தியது  சன்னுக்கும் நக்கீரனுக்கும் லாபம், அவ்வளவுதான். ஆனால்  இந்த லாபத்திற்காக அவை செய்யும் அட்டகாசம், அடாவடி, தாங்கவில்லை.

நித்தியானந்தா சம்பந்தப்பட்ட விடியோக்களைவிட என்னைக் கொதிப்படையச் செய்த  விஷயம்  சன் செய்தியாளர்கள் குரலை உயர்த்தி நித்தியானந்தா செய்திகளைப் படித்தது, அந்தாளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வோரைத் தேடிப்பிடித்து அவர்களை சானலில் தொடர்ந்து காண்பித்து, மக்களிடையே வெறியைக்  கிளப்பியதுதான். Mob hysteriaவை வேண்டுமென்றே உருவாக்குகிறார்கள். சாமியார் இனி வெளியே தலை காண்பிக்கமுடியாது. அவருடைய ஏமாற்றுவேலைக்கு வேண்டியதுதான். ஆனால் அவரைக் கொலை செய்யுமளவு வெறியைத்தூண்டும் வகையில் செய்திகளை ஒளிபரப்புவது முற்றிலும் பொறுப்பற்ற செயல்.

அதைவிடவும்  கொடுமை சம்பந்தப்பட்ட நடிகையை  எல்லோரும் தெரிந்துகொள்ளும்வகையில் காட்சிகளை ஒளிபரப்பியதுதான். முதல்நாளாவது அங்கே இங்கே மறைத்து, பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், நித்தியானந்தாவைத் தாக்கினர்.

மறுநாள் நக்கீரன் இன்னும் வெளிப்படையான புகைப்படங்களை  வெளியிட்டு, நடிகை யார் என்றும்  சொல்ல சன்னும் அப்படியே சொல்லத் துவங்கிவிட்டது.

இப் பிரச்சினையில்  நடிகையைப் பற்றிய காட்சிகளை பகிரங்கமாகக் காட்டும் உரிமை இவர்களுக்கு யார் கொடுத்தது? வெளிநாடுகளில் இதற்காக இவர்கள் மீது வழக்குப்போடலாம். நடிகை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்?

இன்னமும்  படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடிக்கும் அப்பெண்ணை கேவலப்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள் டி.ஆர்.பிக்காக அல்லது சர்க்குலேஷனுக்காக. குஷ்பு விஷயத்திலும் இப்படித்தான் வெறியைத் தூண்டிவிட்டனர்.

பாலியல்  ஒழுக்கமே தலையாயது என்று  அடித்துச் சொல்லும் இவர்கள் அப்படிப்பட்ட காட்சிகளை ஒளி பரப்புவது அல்லது பிரசுரிப்பது அருவருப்பான ஒழுக்க மீறல் என்று நினைப்பதில்லை. குறைந்த பட்சம் பெண் பத்திரிகையாளர்களாவது இப்படிப்பட்ட வக்கிரபுத்திக்காரர்களை பகிரங்கமாகக் கண்டிக்க முன்வரவேண்டும்.

தமிழ் சமூகத்தின் மிக முக்கிய விரோதிகள் சன் டிவியும் நக்கீரனும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

 

பி.கு.: இக்கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரு யோசனை. அவர்களின் அபிமான தலைவர்களின் வீடுகளுக்கென தனி ‘பீட்’ போட்டால், நிருபர்களை உலவவிட்டால்,  இன்னமும் சுவையான காட்சிகள் கிடைக்கும். வெளியிடலாமே? அகில இந்திய அளவில் பரபரப்புக்கூடும்.

 

 

 

Advertisements