எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

அண்மையில் சென்னையில் நடந்த ஒரு கலந்தாய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், தலித் மக்கள் பிரச்சினையில் மாநில அரசின் அணுகுமுறை சரியில்லை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் போதுமான அளவு நடவடிக்கை எடுப்பதில்லை, அரசுப் பணிகளில் தலித்துகளுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை, அரசிடம் இது குறித்து சரியான புள்ளிவிவரம் இருப்பதாகவே தெரியவில்லை, தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக 8,000க்கும் மேற்பட்ட புகார்கள், மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் இன்னமும் தொடர்கிறது என்று சரமாரியாக குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசிவிட்டுப் போனார்கள். வழக்கம்போல தமிழக முதல்வருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

என்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறார்களே என்று புலம்பி மறுநாளே ஓர் அறிக்கை விட்டார், சார் என்னையடிக்கிறான் சார் என்ற ரீதியில் மத்திய அரசிடம் புகார் கூறப்போவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தனக்கு வேண்டாதவர்களிடமிருந்து பெற்ற தகவல்களை நம்பிவிட்டதாம் ஆணையம். தமிழ்நாட்டில் முற்றிலுமாக மலம் அள்ளுவதில், சாக்கடைகளை தூர்வாருவதில் மனிதர்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டதாம். தலித் மக்கள் நலனுக்காகவே அவர் எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாராம்.

தமிழ்நாட்டில் தலித்துகள் நிலை அனைவருக்கும் தெரியும். எப்படி வெள்ளைக்காரன் போய் காங்கிரஸ்காரன் சுரண்டத்தொடங்கினானோ அதே போல திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் பிராமணனை அகற்றிவிட்டு மேல் மற்றும் இடைநிலை பிராமணரல்லாதார் இப்போது கொட்டமடிக்கின்றனர். தலித் மக்கள் நிலை ஆங்காங்கே ஓரளவு மேம்பட்டிருந்தாலும் பொதுவாக அம்மக்கள் மீதான ஒடுக்குமுறை, கொடுமைகள் குறைவதாக இல்லை. இடைநிலை சாதியினரே தங்களின் அடிப்படையான வாக்குவங்கி என உறுதியாக நம்பும் திராவிடக்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதோடு சரி என்பது பலருக்கும் தெரியும். குறிப்பாக ஊடகங்களில் பணிபுரிவோர்க்கு. ஆனாலும் அவர்கள் முதல்வரின் அர்த்தமற்ற அளப்பரியை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.

அவரது அறிக்கையை அப்படியே பிரசுரித்த பத்திரிகைகள் மலம் அள்ள, சாக்கடை அடைப்பை நீக்க நகர சுத்தி தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்களா என்று தங்கள் நிருபர்கள் மூலம் தெரிந்து வெளியிடமுடியாதா என்ன? செய்யலாம், ஆனால் செய்வதில்லை – அரசு விளம்பரம் போய்விடுமே என்கிற அச்சம் ஒரு புறம், நமக்கென்ன, எப்படியிருந்தாலும் தலித் மக்கள் இப்படியே இருந்து பழகிவிட்டார்கள் என்ற அலட்சியம்.

நாள்தோறும் சென்னையில் பல இடங்களில் சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக இறக்கிவிடப்படும் தொழிலாளர்களை நாம் அனைவருமே பார்க்கிறோம், அவ்வாறு இறக்கிவிடப்படுவோர் நச்சுவாயுவினால் தாக்கப்பட்டு இறப்பதாக அவ்வப்போது நாளேடுகளே செய்தி வெளியிடுகின்றன, போதிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை இறக்கிவிடுவோர் தண்டிக்கப்படுவதாக வரலாறே கிடையாது, ஏன் என்று ஊடகங்களும் கேட்பதில்லை.

ஆணைய உறுப்பினர்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை. அவர்கள் காங்கிரஸ்காரர்கள். அருந்ததியர்க்கான உள் ஒதுக்கீட்டை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கெதிரானது என்று குறிப்பிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் தலித்துகள் நிலை குறித்து அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால் விமர்ச்னங்களை நேரடியாக எதிர்கொள்ள திராணியில்லாமல், என்னைப் பற்றியா, நான் தலித்துகளின் சம்பந்தி இல்லையா என்று முதல்வர் கூப்பாடு போட்டிருக்கிறார்.

ஆணையம் செய்தியாளர்களை சந்தித்த மாலையே விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் தாழ்த்தப் பட்டவர்க்காக செய்துவரும் அளப்பரிய பணிகளுக்காக அவரைப் பாராட்டி, தங்களிடம் விருதுபெறுமாறு இறைஞ்சினா. அவரும் பெரிய மனதுடன் ஒத்துக்கொண்டார்.

மகிழ்ச்சிக்கடலில் திளைத்தவாறே போராளிகள் தீட்டிய செய்தியறிக்கை இது –

தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010ஆம் ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்’ விருதினை வழங்குவதெனும் எமது முடிவுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மகிழ்வுடன் இசைவளித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளின் போது “அம்பேத்கர் சுடர்’, “பெரியார் ஒளி’, “அயோத்திதாசர் ஆதவன்’, “காயிதேமில்லத் பிறை’, “காமராசர் கதிர்’, “செம்மொழி ஞாயிறு’ என்னும் விருதுகளைப் பொற்கிழியுடன் சமூக நலத்தொண்டர்களுக்கு வழங்கி வருகிறோம். இத்தகைய விருதுகளில் அம்பேத்கர் சுடர் விருதினை இந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வழங்குவதில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமிதம் கொள்கிறோம்.

ஏப்ரல் 14ஆம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள மகத்தான பெருவிழாவில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுதொடர்பான இன்னொரு குறிப்பு. திமுக பொதுக்குழு கூடிய அன்று விமான நிலையச் சாலையில் வழிநெடுக அஞ்சாநெஞ்சன் அழகிரியை வாழ்த்தி பல சுவரொட்டிகள், பானர்கள். அதில் ஒன்று அவரை சே குவாரா என்று புகழ்ந்தது.

எனக்கு சிரிப்பு வரவில்லை. என்னைப்போல பலரும் நாமெல்லாம் எவ்வளவு கையாலாகதவர்களாகிவிட்டோம் என்று குமைந்திருக்கவேண்டும்.

எல்லோரும் பொய் சொல்லிக்கொண்டிருக்கும்போது உண்மைசொல்வதே புரட்சி என்றான் ஜார்ஜ் ஆர்வெல், இன்றைய காலகட்டத்தில் குமைவதே புரட்சியோ? வேதனைதான்.

Advertisements