செம்மொழி மாநாட்டு கீதமிங்கே, தமிழ் மரபெங்கே?

ஹலோ எவ்ரிபடி! இங்கே கேளுங்க! இந்த உலகச் செம்மொழி மாநாட்டின் தமிழ் கீதம் பற்றி சொல்லப் போறேன். அருணா சாய்ராம், செளம்யா முதல், நேற்று உருவாக்கப் பட்ட சைந்தவி வரை, வேட்டியில் தோன்றும் டிஎம் கிருஷ்ணா போன்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் ஒரு புறம், அந்நாளைய திரை இசை ஜாம்பவான்கள் டி எம் எஸ், பி சுசீலா, இன்றைய முன்னணிப்பாடகர் ஹரிஹரன் என்று பல வகைப்பட்ட அதீத இசைத்திறம் கொண்ட அனுபவம் மிக்கவர்கள் இப்படி பலரையும் பாடவைத்தும், சகிக்கமுடியாத ஒரு சொதப்பல், ஒரு சூப்பர் ஃப்ளாப் பாட்டு வழங்கப் பட்டிருக்கிறது.
மேற்கத்திய இணைப்பு-முயற்சி (Fusion) என்ற பெயரால் ஒரு கலப்படத்தை, ஒரு மோசமான அவியலைத்தான் (Pointless Collage) தந்திருக்கிறார் ஏ.ஆர். ரெஹ்மான். அவர் அவசியம் ஜெயகாந்தனின் “பாரீஸுக்குப் போ”  நாவலைப் படிக்க வேண்டும். நிச்சயம் தெளிவடைவார். நிறையப் புரிந்து கொள்வார்.
லயத்தை ஆதாரமாகக்கொண்ட இசைதான் ரஹ்மானுக்குத் தெரியும். (லயம் கூடப் பெரிய வார்த்தையோ என்று தோன்றுகிறது.) இது தான் அவரது இசையாதிக்கம் துவங்கிய காலத்திலிருந்து நம்மை வந்தடைந்துள்ளது. கால்களை இயல்பாகத் தாளமிட வைக்கும் இசை. ஆனால்அது இசையின் ஒரு அம்சம்தானேயொழிய அதுவே இசை அல்ல. கர்நாடக சங்கீத்ததில் கூட இந்த லயத்தில் மாட்டிக் கொண்டு விடுதலை பெறாதவர்களின் பட்டியல் மிகப் பெரிது. ரஹ்மானின் லய வசப்பட்ட பாடல்கள் இளைஞர்களை ஆட்கொண்டு விடுகிறது. ஆனால் அவை காலத்தை வெல்லுமா? ரஹ்மானின் பாடல்கள் யாவுமே தலைமுறைகள் தாண்டி இசைக்காகப் பேசப்படுமா/ பேசப்படாதா என்பதற்கு கண்முன்னே இருக்கும் உதாரணம் தான் இந்த தமிழ் ஆந்தம் (ANTHEM).
ஆயிரம் கரங்கள் நீட்டி (கர்ணன்) நம்மை இன்றும் அழைக்கும் பாடல்கள் ரெஹ்மானின் இயலாமையைத் தான் நமக்கு உணர்த்துகின்றன. அவள் பறந்து போனாளே (பார் மகளே பார்), ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும் (பழநி), இன்னும் பல டிஎம்எஸ்-சீர்காழி, டிஎம்எஸ்-பி பி ஸ்ரீநிவாஸ், சுசீலா-ஈஸ்வரி பாடல்கள் பல. பாடலை நினைத்தவுடனேயே அது நமது காதில் இன்பத் தேனைப் பாய்ச்சும். எல்லாமே சூப்பர் ஹிட். அத்தகைய காலத்தால் அழியாத பாடல்கள் இறுதி வடிவம் பெறும் முன் நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கக் கூடும் என்று தோன்றுகின்றது.
ஒவ்வொரு பாடகருக்கும் அமைந்துள்ள இயல்பான குரல்தன்மை இருக்கும், அதை எப்படி எங்கெங்கு புகுத்துவது. டிஎம்எஸ்-ஸ்ரீநிவாஸ் மற்றும் சுசீலா-ஈஸ்வரி போன்றோரின் குரல்களில் உள்ள மாற்றங்கள், வேறுபாடுகள், இந் நுணுக்கங்களை எல்லாம் தானும் அறிந்து கேட்பவரையும் உணரவைக்கும்போது இசைஞானி உருவாகிறான், சரித்திரமாகிறான். (இசைஞானி பட்டம் பெற்றவரை மட்டும் நான் இங்கே குறிப்பிடவில்லை.)
மாநாட்டுப் பாடலை கம்போஸ் செய்யும்போது ஏ.ஆர்.ரெஹ்மான் தான் அணிவகுக்கும் பாடகர்களை மனதில் கொண்டோ, தமிழர் பெருமை பேசும் பாடலில் தமிழ் மணம் வீசவேண்டும், ஒவ்வொரு ஒலியிலும் தமிழன் பண்பாடு, பாரம்பரியம் கம்பீரமாக வெளிப்படவேண்டுமென்றோ நினைத்ததாகத் தெரியவில்லை.
கலைஞரின் பாடல்/கவிதை வரிகளே கொடுமை. வீரமா, சோகமா, பூரிப்பா – என்ன வெளிப்படுகிறது அங்கே? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து நிலவிய பாடல் வகைகளின் அட்டவணை, எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டு, பின் வாழ்த்து. இது என்ன முனைவர் ஒருவர் ஆய்வுக்கட்டுரை வாசிக்கிறாரா?
”உள்ளன்பும் தமிழன்பும் ஊற்றி ஊற்றி” ஒன்றும் எழுதப்படவில்லை. எல்லாப் புகழும் கலைஞருக்கேவா?  இந்தக் கொள்கைதான் பெரிதாகத் தெரிகிறது. இனிதோ இனிதில்லையோ எல்லாவற்றையுமே நானே செய்திடல் வேண்டும்.
அவரது தர்பாரிலேயே நல்ல தமிழ்த்திறம் மிக்க கவிஞர்கள் உளரே! கலைஞர் பணித்திருந்தால் பெய் எனப் பெய்திருப்பார்களே! நம் தோட்டத்திலேயே வேறு செடிகளில் உள்ள மல்லிகைப் பூக்கள் மணக்காதோ? இதுதான் முடிவோ? இல்லையெனில் பாரதியிலும், அவரது தாசனிடத்திலும் தேடிப் பிடித்திருக்கலாமே. இப்படித் தேடிப் பிடித்தது தானே ”தமிழுக்கும் அமுதென்று பேரும்” மற்றும் “சங்கே முழங்கு” எனும் ”சினிமாப்பாடல்கள்”. தன் புகழே தன் கண்ணையும் பார்வையையும் மறைக்கிறதோ! இசையில் தமிழின் எந்தவித மகத்துவத்தையும் காணோம் என்றால், பாடல் வரிகளிலுமா? இங்கே வெட்கப்பட வேண்டிய விஷயம்  – யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றுதான் ஒலி/ஒளிபரப்பப் படும் பாடலில் கேட்கிறது. எனக்குக் காதில் கோளாறு இல்லை! எடுத்தாள்வதிலுமா தவறு? உலகச் செம்மொழி கற்ற எண்ணற்றோர் இருந்தும் திருத்த ஒருவரில்லையா?. கணியன் பூங்குன்றனாருக்கு மறுவாழ்வு தர வேண்டாம், அவர் சொல்வதைப் புரிந்து சரியாக உரைத்தால் போதுமே. ஆனால் இன்று என்ன நடக்கிறது? அரசனை எதிர்த்துப் பேசாதிருப்பதே சாலச்சிறந்தது எனும் பிழைப்புவாதம்.
அரசின் அதிகார ஆணை (G O) அத்தையை சித்தியாக்கி விடுமா என்ன? ஆக்கிவிட்டார்களே, கேளிரை கேளீராக்கிவிட்டார்களே….
தமிழ் நாடெங்கும் தடபுடல்! அமளி!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்!
குவியுது பணங்கள்! மலை போற்குவியுது!
தமிழன் தொண்டர் தடுக்கினும் நில்லார்!
ஓடினார், ஓடினார், ஓடினார், நடந்தே!
ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள்
ஒளி கொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்!
ஐயோ எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்
அங்கே கூடினால் அத்தனை பேரும்
குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்
வீரத் தமிழன் வெறி கொண்டெழுந்தான்.
உரக்கக் கேட்டான் : உயிரோ நம் தமிழ்?
அகிலம் கிழிய ஆம் ஆம் என்றனர்.
உடனே  திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழைய
நைந்த தமிழரொடு நானிருந்தேனே!
(இப்படித்தான் பாவேந்தர் குமுறியிருப்பார்)
தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்…….
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்……..
பூங்குன்றனாரை சிதைத்தா முழங்கச் சொன்னான்?
எங்கே போகிறோம்? கோபாலபுரம், மற்றும் ஆழ்வார்பேட்டைக்கோ?
Advertisements