கவலைப்படுவது நமது உரிமை

தோழர் வரதராஜனின் மரணம் குறித்து பதிலுக்கு பதில் என்ற ரீதியில் சமீபத்தில் பா.ம.கவும், சி.பி.எம்மும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியிருப்பது எதை வெளிக் கொண்டுவந்திருக்கிறது? அரசியல் வன்முறைதான் இப்பொழுது அரசியல் என்றே ஆகிவிட்டது என்பதைத்தான். பேச்சு வார்த்தைகளுக்கு இடமில்லை, அறிக்கைக்கு மறு அறிக்கை என்பதற்கும் இடமில்லை. எங்கே ஆரம்பிப்பது, இந்திரா காந்தியிலிருந்தா, அல்லது அதற்கு முன்னமுள்ள காலத்திலிருந்தா?
வரதராஜன் விஷயத்தில் பிரகாஷ் கரத்தின் பிரஸ் நோட் விநோதமான ஒன்றாகத்தான் இருந்தது. யாரோ ஒரு பெண் வரதராஜன் பற்றிப் புகார் கொடுக்க, அது பொதுக் குழு வரை விசாரணைக்குச் சென்றது என்கிறார். ஏன் பிணராயி விஜயன் பற்றி யாரும் புகார் கொடுக்கவில்லையா? திருவனந்தபுரத்தில் ஒரு சாதாரண ப்ரஜையிடம் பேச்சுக் கொடுத்தால், “யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்” என்ற விண்ணப்பத்துடன் நம்மிடம் மணிக்கணக்கில் பேசி அங்கு நடக்கும் அட்டூழியங்கள் பற்றி விவரமாகச் சொல்வார். ஒரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒன்றுமே முறைப்படி நடக்காது. எல்லாமே வரிசை தாண்டித்தான் நடக்கும் – பதிவு செய்து கொள்ளுதல் முதல். கேட்டால் “உட்கார். நான் விஜயனின் ஆள், தெரியுமா?”. என்ற ஒரு அடையாளக் குறியுடன் நம்மை பயமுறுத்துவார்கள். இது ஏதோ கற்பனை அல்ல, மலையாளமும் தெரிந்து மறைவாக நின்று கவனித்தால் இது கண்கூடாகப் புலப்படும்.
கம்யூனிஸ்டாக  இருப்பவன் கடைசி வரை  கம்யூனிஸ்டாகத்தான் இருப்பான், மறைவான் என்பார்கள். அதாவது அவன் வேறு ஒரு கட்சியில் சேர மாட்டான் என்பதே இதன் விளக்கவுரை. இதெல்லாம் கடந்த காலம். இந்த நியதி பலமுறை மாறிவிட்டது. ஆனால் இந்த கட்சியின் போக்கில் மாறாமல் இருப்பது ஒன்று. ஒருவர் தன்னைத் தொழிற்சங்கத்தில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தாலும், கோர்வையாக புள்ளி விவரங்களுடன் பேச வல்லவராக இருந்தாலும், உலக பொருளாதார நிலைபற்றி திறம்பட அனைவருக்கும் புரியும் வண்ணம் தன் எண்ணத்தை வெளிப்படச் செய்பவராக இருந்தாலும்,(குறிப்பிட்ட குணாதிசயங்கள் எல்லாம் வரதராஜனுக்கு முற்றும் பொருந்தும்) – அவர் தலைமைப் பதவிக்கு வந்து விடுவாரோ என்னும் பயத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். முக்கியமாக அவரைக் காணாமல் போகச் செய்து விடுவார்கள். வரதராஜன் அவர்களுக்கு உண்டான பார்ட்டியின் தண்டனை இதுதான். பவர் ஸ்டரகிளா அல்லது கீழ்த்தரமான அரசியலா? இவர் விஷயத்தில் பாதிக்கப்பட்டவருக்கு விஷய பலம் (இதுதான் ஞானமோ?) மிகுந்தே இருந்தாலும், ஆள் பலம் என்பது இல்லவே இல்லை போலும்! ஆனால் நிஜத்தில் பார்ட்டியின் துரதிர்ஷ்டம், அது ஒரு உணர்ந்த கம்யூனிஸ்டை அறவே இழந்து நிற்கிறது. கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும், மார்க்ஸீய சித்தாந்தத்தை முழுமையாக புரிந்தோ புரியாமலோ வெறுத்து நிற்பவர்களுக்கும், இந்த மரணம் வாய்க்குருசியான அவல்.
லஞ்சம், ஊழல், வசதியுள்ளவர்களையும் முணுமுணுக்கச் செய்து ரேஷன் கடைகளை அணுகச் செய்யும் விலைவாசி, அன்றாடம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், முளைத்து வெடிக்கும் வெடிகுண்டுகள்……… மார்க்ஸீய சக்திகளுக்கு இது நல்ல தருணம் ஐயா! மக்களை விழிப்படையச் செய்யலாம். அசல் காரணங்களைக் காட்டிக் கொடுக்கலாம். ஒன்று திரட்டலாம். திசை திருப்புதல்களை இனம் கண்டு கொள்ள உதவலாம். மாற்றுப் பாதை உண்டென்று கோடி காட்டலாம். இதை விடுத்து, ஒன்று தேர்தல் சார்ந்த அரசியல், அல்லது தனி மனிதர்கள் பற்றி தான்தோன்றித் தனமான சுயம்புச் செயல்களை மேற்கொள்ளுதல் – இவற்றில்தான் திண்ணமாக இருக்கிறார்கள் நமது காம்ரேடுகள்.
திருப்பங்கள்  ஏற்படுமா? இருளில் தூரத்தில்  வெளிச்சம் தெரிகிறதா, அல்லது எல்லாம் மாயை தானா? கண்ணில்லாதவருக்கு  நம் கண்ணைக் கொடுத்து அவர்களைப் பார்க்கச் செய்யலாம். நமக்கு ஒரு வாழ்வின்-திருப்தியும் கிடைக்கும். ஆனால் கண்களிருந்தும் தங்களுக்குப் பிடித்த நிறப்பார்வையை போதுமென்று இருப்பவர்களை என்னவென்பது?
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: