எது ஒழுக்கம்?

தோழர் W.R வரதராஜனின் தற்கொலை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து இன்னும் யாரும் முழுமையாக விடுபடவில்லை. பாலியல் விவகாரங்கள் குறித்த இடதுசாரி அமைப்புகளின் இறுகிய பார்வையால் தூண்டப்பட்டிருப்பதாலேயே இந்த மரணம் வழக்கத்தைவிட அதிகமான விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

தோழர் வரதராஜன் தற்கொலை செய்துகொண்டதற்கு சொல்லப்படும் காரணம், அவர் சி.பி.எம்மின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதுதான். திருமண உறவுக்கு வெளியே வேறொரு பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததைப் பற்றி அவரது மனைவியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான சரஸ்வதி கட்சியில் புகார்செய்தார். அந்த புகாரின் அடிப்படையிலேயே கொல்கத்தாவில் கூடிய சி.பி.எம்மின் மத்தியக்குழுவில் வரதராஜனுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டது. தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லையாம் அவர். விழியில் திரண்ட நீருடன், தான் எப்போதும் உண்மையான கம்யூனிஸ்ட் என்று மட்டும் சொல்லியிருக்கிறார். வரதராஜன் பற்றித் தான் எந்த புகாரும் கட்சியிடம் கொடுக்கவில்லை என்று அவரது மரணத்துக்கு பிறகு சொல்கிறாராம் சரஸ்வதி.

கிணற்றிலிருந்து கிளம்பும் பூதங்கள் போல பல கதைகள் உலவுகின்றன. எல்லா கதைகளும் குற்றம் சாட்டுவது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும் வாசுகியை. சரஸ்வதி அவரிடம் தனது கணவரின் நடவடிக்கைகள் பற்றிப் புலம்பியதாகவும்  அதனடிப்படையில் வாசுகி கட்சியில் பிரச்னையைக் கிளப்பியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே வரதராஜன் நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. விவாகரத்து கேட்டதாலேயே அவர் மீது புகார் கிளப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நண்பர்களின் தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்கள், சி.பி.எம்மில் நடந்ததாக வந்தடையும் மிகவும் பிற்போக்கான விஷயங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரும் அயர்ச்சியையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகின்றன.

கட்சிக்கு கம்யூனிஸத் தத்துவங்கள் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறதா என்கிற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

திருமணத்திற்கு வெளியே தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப்படும் வரதராஜனை ஒரு கம்யூனிஸ்டு எப்படி இருக்கக்கூடாதோ அப்படி இருந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறது சி.பி.எம்மின் மத்திய கமிட்டி ( unbecoming of a communist).  திருமணத்துக்கு வெளியே ஒரு உறவைப் பேணி அதில் ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்ட கார்ல் மார்க்ஸையும் இவர்கள் கம்யூனிஸ்டு இல்லை என்று சொல்வார்களோ? அந்த குழந்தையை வளர்த்தது எங்கெல்ஸ்தான் என்கிற தகவல் அவர்களுக்குத் தெரிந்திருக்காதோ?

அலெக்ஸாண்ட்ரா கொலாண்டாய்

மார்க்சிய சித்தாந்தங்களை, மார்க்ஸிய-பெண்ணிய சித்தாந்தங்களை இவர்களெல்லாம் எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார்கள்?  மிக முக்கியமான மார்க்சியவாதியும் பெண்ணியவாதியுமான அலெக்ஸாண்ட்ரா கொலாண்டாய் தனது சுயசரிதைக்கு பாலியல்ரீதியாக முன்னேறிய ஒரு கம்யூனிஸ்ட் பெண்ணின் சுயசரிதை (The Autobiography of a Sexually Emancipated Communist Woman) என்று தலைப்பிட்டிருக்கிறார். கொலாண்டாய் தனது படைப்புகளில் ஒன்றில் உறவுகள் குறித்து ஒரு கோப்பை குடிநீர் தத்துவத்தை முன்வைக்கிறார். “ஒரு கம்யூனிஸ்ட் சமுதாயத்தில், பாலியல்ரீதியாக உறவு கொள்வது என்பது ஒரு கோப்பை தண்ணீரைக் குடிப்பதை போல எளிமையாகவும் சிக்கலற்றதாகவும் இருக்க வேண்டும்” என்பதுதான் கொலாண்டாயின் வாதம். காதலற்ற திருமணங்களால் ஏற்படும் சிக்கல்களை மனதில் கொண்டே கொலாண்டாய் இதை சொல்லியிருக்க வேண்டும். இந்தத் தத்துவத்தை கிளாரா ஜெட்கின் என்னும் பெண்ணியவாதியுடனான உரையாடலில் லெனின் நிராகரித்தாலும், லெனின் உள்பட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலியல் உறவுகள் தனி மனித விருப்பு வெறுப்புக்கள், தேவைகளைப் பொறுத்தே என்ற ரீதியில்தான் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். (லெனினுக்கும் இனெஸ்ஸா என்கிற விதவைக்கும் பாலியல் ரீதியான உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை அத்தகைய செய்திகள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது, ஆனாலும் ஏதோ ஒரு வித நெருக்கமான தொடர்பிருந்திருக்கிறது, இதைப்பற்றியெல்லாம் எந்த அளவு கம்யூனிஸ்ட் கட்சிகள் விவாதித்திருக்கின்றன. இல்லையென்றால் மார்க்ஸ், லெனின் இவர்களெல்லாம் புனிதப்பசுக்களா?)

ஜார்களின் ஆட்சியில் ஒரு பால் உறவு, பெண்கள் தனித்து வாழும், விவாகரத்து கோரும் உரிமைகள் ஆகியவற்றின் மீது இருந்த நூற்றாண்டுக்கால தடைகள், சோவியத் அரசு அமைந்தவுடன் நீக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

குடும்பத்தை பெண்ணை அடிமைப்படுத்தும் நிறுவனமாக எங்கெல்ஸ் முன்னிறுத்துகிறார். ஆனால் சி.பி.எம் குடும்பப் பிரச்னைகளுக்கு பஞ்சாயத்து செய்கிறது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒப்புதல் இருந்திருந்தாலும் வரதராஜன் நடவடிக்கைகள் சரிதானா என்பது விவாதத்திற்குரியதுதான். ஆனாலும் எந்தவிதத்திலும் கட்சியில் அவருடைய செயல்பாடுகளை அந்த உறவு பாதித்திருக்கப்போவதில்லை. தவறு என்றாலும் அதனால் பாதிக்கப்படுபவர் வரதராஜனின் மனைவி. தனிப்பட்ட முறையில் அந்த பிரச்னைக்கு அவர் தீர்வுகண்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல பெண்களின் பிரச்னைகளை கையிலெடுத்து போராடும் மாதர் சங்கத்திற்கு, காவல்துறை மூலமாகவோ அல்லது கோர்ட் மூலமாகவோதான் இந்த பிரச்னை அணுகப்பட்டிருக்க வேண்டும் என்கிற எளிய உண்மை  ஏன் புரியவில்லை?

வரதராஜனின் மரணம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான கட்டுரையில் கட்சித் தலைமை இப்படி சொல்லியிருக்கிறது: “அவரது வாழ்க்கையில் தனிமனித பலவீனங்களுக்கு இடம் கொடுத்தது, தவறான விஷயம். (அப்போது அப்படிப்பட்ட பலவீனங்களுக்கு மார்க்ஸ் இடம் கொடுத்ததையும், அதன் காரணமாக ஜென்னி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதையும் என்னவென்று சொல்வது?) அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆதாரபூர்வமாக சரிபார்க்கப்பட்டது.”

ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் செய்யவேண்டிய வேலையா இது?

பெண்ணியம் பற்றியும் பாலியல் விழுமியங்கள் பற்றியும் சி.பி.எம் உள்பட இடதுசாரி கட்சிகளின் பார்வை மிகவும் குறுகலாக இருப்பதற்கு பல உதாரணங்களை காட்டலாம். சமீபத்தில், கேரளாவில் தாக்கப்பட்ட எழுத்தாளர் பால் சக்காரியா ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் பெண்ணிய இயக்கமாக உருவெடுத்திருக்க வேண்டிய இந்தியாவில் பெண்ணிய இயக்கத்திற்கு தலைமையேற்றிருக்க வேண்டிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இன்னும் பாலியல் விழுமியங்கள் சார்ந்த, பெண்ணிய கருத்தியல்கள் சார்ந்த விஷயங்களில் தன்னை நிகழ்காலத்தோடு பொருத்திக் கொள்ளவும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதோடு மிகவும் இறுகிய, முற்போக்குவாதிகளால் நிராகரிக்கப்படும் விழுமியங்களை பிடித்துக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

கோடிகோடியாக பணம் குவித்ததாக கேரளாவில் பினராயி விஜயன் மீது குற்றசாட்டு எழுந்த போது கட்சி அவரை கடுமையாக பாதுகாத்தது. ஆனால் வரதராஜன் அவமானப்படுத்தப்படுகிறார்.

ஆக, சி.பி.எம்மைப் பொறுத்தவரை, பாலியல் உறவுகள் மட்டும்தான் ஒழுக்க வரையறக்குள் வரும். பிற எதுவுமே, பொதுவாழ்வைச் சார்ந்ததாக இருந்தாலும், ஒட்டுமொத்த சமூகத்தை பாதிப்பதாக இருந்தாலுங்கூட  ஒழுக்கம் தொடர்பானது அல்ல போலும். தனிமனித செயல்பாடுகளுக்கு, குறிப்பாக பாலியல் தொடர்பானவற்றிற்கே மேலதிக முக்கியத்துவம்.  இதைவிட பிற்போக்குத்தனமான அணுகுமுறை இருக்கமுடியுமா என்ன?

Advertisements

5 Responses

 1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  தன்னைச் சுடும்!

  //பாதிக்கப்பட்ட பல பெண்களின் பிரச்னைகளை கையிலெடுத்து போராடும் மாதர் சங்கத்திற்கு, காவல்துறை மூலமாகவோ அல்லது கோர்ட் மூலமாகவோதான் இந்த பிரச்னை அணுகப்பட்டிருக்க வேண்டும் என்கிற எளிய உண்மை ஏன் புரியவில்லை?//

  ஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.
  http://ipc498a-crematorium.blogspot.com/

  மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, “பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்’ என்று பேசினார்.

  இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்’ என்று கூறியுள்ளனர்
  http://ipc498a-misuse.blogspot.com/

 2. W.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்

  ஜனநாயக மாதர் சங்கம் என்ற போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பல குடும்பங்களை சீரழித்த உ.வாசுகி தலைமையில் வரதராஜனுக்கு எதிரான சதி தொடங்கியது. வரதராஜனின் மனைவி சரஸ்வதியை வைத்து வரதராஜன் மீது ஒரு பொய்யான பாலியல் குற்றச் சாட்டை கட்சியிடம் புகாராக கொடுக்க வைத்தனர்.
  http://www.savukku.net/2010/02/wr.html

 3. பினரயி விஜயனுக்கு வக்காலத்து வாங்கியதிலிருந்தே, சிபிஎம்மின் யோக்கியதை தெரிந்து போனது. மார்க்சின் பெயரைச் சொல்லிக் கொண்டு, பெருமுதலாளி டாட்டாவுக்கு ஆதரவாக, உழைப்பாளி மக்களை அடித்து நொறுக்கியவர்கள்தான் இவர்கள். 25 ஆண்டுகளாக இவர்கள் ஆளும் மாநிலத்தில் தேனும் பாலும் பெருகி ஓடாவிட்டாலும், உணவுக்கே வழியில்லாததால்தான், மேற்கு வங்க மக்கள் மத்தியில் நக்சலைட்டுகள் ஆதரவு பெற்று இருக்கின்றனர். உமாநாத் என்ற தலைவர், தனது மனைவி பாப்பா உமாநாத்தையும், மகள் வாசுகியையும், தனது பொலிட்ப்யூரோ செல்வாக்கால், மத்தியக் குழுவில் இடம் பெறச் செய்து விட்டு, திமுகவைப் பார்த்து வாரிசு அரசியல் என்று விமர்சனம் செய்யும் வெட்கமற்றவர்கள் இவர்கள். தோழர் வரதராஜன் மீது, வேறு பெண்ணோடு தொடர்பு என்பது மட்டும் தான் குற்றச் சாட்டு. அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் 1 லட்சம் ரூபாயை 1995ல் கையாடல் செய்த அதன் தமிழ் மாநில தலைவர் ஏ.பாக்கியம் இன்னும் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார்.

  சென்னைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நண்பர்கள் மார்க்சிஸ்ட் தலைவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, முக்கிய துறைகளில் சீட் வேண்டு, அட்மிஷன் நேரங்களில் மிகுந்த தொந்தரவு செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

  இதெல்லாம் ஒழுக்க மீறல் இல்லையா ? கட்சிக்காக பல ஆயிரங்களை அள்ளித் தரும் வங்கிப் பதவியை தூக்கி எரிந்து விட்டு வந்த ஒரு தோழர் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துக் கொண்டது தவறென்றால் எல்லோருக்கும் தெரிந்த கணக்குப் படியே மூன்று மனைவிகள் வைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியோடு கூட்டணி வைத்து கொஞ்சிக் குலாவுவது மட்டும் நியாயமா ?

  கருணாநிதி ராஜ்யசபை எம்பி பதவி தருகிறார் என்றதும், பல்லை இளித்துக் கொண்டு வாலைக் குழைத்து, கோபாலபுரத்தில் நிற்பவர்கள் தானே இவர்கள் ? இவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியும் ?

 4. thank you fro bringing these things to notice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: