மனப்பாடம் செய்ய ஓர் அறிக்கை

தன் மீதான நடவடிக்கை குறித்து, கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்துக்கு டபிள்யூ ஆர் வரதராஜன் எழுதிய கடிதமும் அதற்கு பிரகாஷ் காரத்தின் பதிலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் தரப்பட்டிருக்கின்றன.

WRV letter (2)

CPIM Prakash Karat Press

பிரகாஷ் காரத்தின் பதிலானது முழுக்க முழுக்க ஸ்டாலின் பாணியில் அமைந்திருக்கிறது.  சூ என் லாயைப் பற்றி ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன வார்த்தைகள் – எதுவும் சொல்லாமல் 20 நிமிடங்கள் அவரால் பேச முடியும்.  பிரகாஷ் காரத்தின் அறிக்கையும் அதையே நிரூபிக்கிறது. டபிள் யூ ஆர் வரதராஜன் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் காரத்தின் அறிக்கையில் பதில் இல்லை.

பாலியல்ரீதியாக ஒரு பெண்ணைத் தொந்திரவு செய்ததாகத்தான் உ.ரா, மீது குற்றச்சாட்டு என்பது மட்டும் தெளிவாகிறது. அப்படி செய்திருந்தால் அது தவறுதான், அதற்கேற்ற தண்டனை கொடுக்கப்படலாம். உ.ரா.வோ குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார், சம்பந்தப்பட்ட பெண் விசாரிக்கப்படவேயில்லை என்கிறார், புகார் கொடுத்த கட்சித்தோழர் வாசுகியே பின்னர் நீதிபதியாகவும் ஆகிறார் காஃப்கா பாணியில். இது குறித்தெல்லாம் கராத் பதில் கூறவே இல்லை.  கட்சிக்கு யாரிடமும் தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநிறுத்தவேண்டிய அவசியம் இருந்தது கிடையாதே.

அவர்களைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கட்சியின் நிலைப்பாட்டை தங்கள் தொண்டர்களுக்கு விளக்கவே கராத்தின் அறிக்கை.  இதை மனப்பாடம் செய்து, கட்சித் தொண்டர்கள் மேடைக்கு மேடை ஒப்பிக்க வேண்டும், அவ்வளவுதான்.

ஆனால் இத்தகைய அறிக்கை இல்லாமலும் இதையேதான் சொல்கின்றனர் கட்சியின் உண்மை ஊழியர்கள் – பழக்கப்படுத்தினால் எவரும் எதுவும் செய்வர் என்ற உன்னத தத்துவத்தைக் கண்டறிந்த பாவ்லோவ் வழி வந்தவர்களல்லவா அவர்கள்?

கராத்தின் அறிக்கை வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுகிறது, மனிதாபிமானிகளை மேலும் கலங்கடிக்கிறது.

Advertisements

எது ஒழுக்கம்?

தோழர் W.R வரதராஜனின் தற்கொலை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து இன்னும் யாரும் முழுமையாக விடுபடவில்லை. பாலியல் விவகாரங்கள் குறித்த இடதுசாரி அமைப்புகளின் இறுகிய பார்வையால் தூண்டப்பட்டிருப்பதாலேயே இந்த மரணம் வழக்கத்தைவிட அதிகமான விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

தோழர் வரதராஜன் தற்கொலை செய்துகொண்டதற்கு சொல்லப்படும் காரணம், அவர் சி.பி.எம்மின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதுதான். திருமண உறவுக்கு வெளியே வேறொரு பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததைப் பற்றி அவரது மனைவியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான சரஸ்வதி கட்சியில் புகார்செய்தார். அந்த புகாரின் அடிப்படையிலேயே கொல்கத்தாவில் கூடிய சி.பி.எம்மின் மத்தியக்குழுவில் வரதராஜனுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டது. தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லையாம் அவர். விழியில் திரண்ட நீருடன், தான் எப்போதும் உண்மையான கம்யூனிஸ்ட் என்று மட்டும் சொல்லியிருக்கிறார். வரதராஜன் பற்றித் தான் எந்த புகாரும் கட்சியிடம் கொடுக்கவில்லை என்று அவரது மரணத்துக்கு பிறகு சொல்கிறாராம் சரஸ்வதி.

கிணற்றிலிருந்து கிளம்பும் பூதங்கள் போல பல கதைகள் உலவுகின்றன. எல்லா கதைகளும் குற்றம் சாட்டுவது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும் வாசுகியை. சரஸ்வதி அவரிடம் தனது கணவரின் நடவடிக்கைகள் பற்றிப் புலம்பியதாகவும்  அதனடிப்படையில் வாசுகி கட்சியில் பிரச்னையைக் கிளப்பியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே வரதராஜன் நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. விவாகரத்து கேட்டதாலேயே அவர் மீது புகார் கிளப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நண்பர்களின் தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்கள், சி.பி.எம்மில் நடந்ததாக வந்தடையும் மிகவும் பிற்போக்கான விஷயங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரும் அயர்ச்சியையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகின்றன.

கட்சிக்கு கம்யூனிஸத் தத்துவங்கள் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறதா என்கிற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

திருமணத்திற்கு வெளியே தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப்படும் வரதராஜனை ஒரு கம்யூனிஸ்டு எப்படி இருக்கக்கூடாதோ அப்படி இருந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறது சி.பி.எம்மின் மத்திய கமிட்டி ( unbecoming of a communist).  திருமணத்துக்கு வெளியே ஒரு உறவைப் பேணி அதில் ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்ட கார்ல் மார்க்ஸையும் இவர்கள் கம்யூனிஸ்டு இல்லை என்று சொல்வார்களோ? அந்த குழந்தையை வளர்த்தது எங்கெல்ஸ்தான் என்கிற தகவல் அவர்களுக்குத் தெரிந்திருக்காதோ?

அலெக்ஸாண்ட்ரா கொலாண்டாய்

மார்க்சிய சித்தாந்தங்களை, மார்க்ஸிய-பெண்ணிய சித்தாந்தங்களை இவர்களெல்லாம் எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார்கள்?  மிக முக்கியமான மார்க்சியவாதியும் பெண்ணியவாதியுமான அலெக்ஸாண்ட்ரா கொலாண்டாய் தனது சுயசரிதைக்கு பாலியல்ரீதியாக முன்னேறிய ஒரு கம்யூனிஸ்ட் பெண்ணின் சுயசரிதை (The Autobiography of a Sexually Emancipated Communist Woman) என்று தலைப்பிட்டிருக்கிறார். கொலாண்டாய் தனது படைப்புகளில் ஒன்றில் உறவுகள் குறித்து ஒரு கோப்பை குடிநீர் தத்துவத்தை முன்வைக்கிறார். “ஒரு கம்யூனிஸ்ட் சமுதாயத்தில், பாலியல்ரீதியாக உறவு கொள்வது என்பது ஒரு கோப்பை தண்ணீரைக் குடிப்பதை போல எளிமையாகவும் சிக்கலற்றதாகவும் இருக்க வேண்டும்” என்பதுதான் கொலாண்டாயின் வாதம். காதலற்ற திருமணங்களால் ஏற்படும் சிக்கல்களை மனதில் கொண்டே கொலாண்டாய் இதை சொல்லியிருக்க வேண்டும். இந்தத் தத்துவத்தை கிளாரா ஜெட்கின் என்னும் பெண்ணியவாதியுடனான உரையாடலில் லெனின் நிராகரித்தாலும், லெனின் உள்பட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலியல் உறவுகள் தனி மனித விருப்பு வெறுப்புக்கள், தேவைகளைப் பொறுத்தே என்ற ரீதியில்தான் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். (லெனினுக்கும் இனெஸ்ஸா என்கிற விதவைக்கும் பாலியல் ரீதியான உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை அத்தகைய செய்திகள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது, ஆனாலும் ஏதோ ஒரு வித நெருக்கமான தொடர்பிருந்திருக்கிறது, இதைப்பற்றியெல்லாம் எந்த அளவு கம்யூனிஸ்ட் கட்சிகள் விவாதித்திருக்கின்றன. இல்லையென்றால் மார்க்ஸ், லெனின் இவர்களெல்லாம் புனிதப்பசுக்களா?)

ஜார்களின் ஆட்சியில் ஒரு பால் உறவு, பெண்கள் தனித்து வாழும், விவாகரத்து கோரும் உரிமைகள் ஆகியவற்றின் மீது இருந்த நூற்றாண்டுக்கால தடைகள், சோவியத் அரசு அமைந்தவுடன் நீக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

குடும்பத்தை பெண்ணை அடிமைப்படுத்தும் நிறுவனமாக எங்கெல்ஸ் முன்னிறுத்துகிறார். ஆனால் சி.பி.எம் குடும்பப் பிரச்னைகளுக்கு பஞ்சாயத்து செய்கிறது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒப்புதல் இருந்திருந்தாலும் வரதராஜன் நடவடிக்கைகள் சரிதானா என்பது விவாதத்திற்குரியதுதான். ஆனாலும் எந்தவிதத்திலும் கட்சியில் அவருடைய செயல்பாடுகளை அந்த உறவு பாதித்திருக்கப்போவதில்லை. தவறு என்றாலும் அதனால் பாதிக்கப்படுபவர் வரதராஜனின் மனைவி. தனிப்பட்ட முறையில் அந்த பிரச்னைக்கு அவர் தீர்வுகண்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல பெண்களின் பிரச்னைகளை கையிலெடுத்து போராடும் மாதர் சங்கத்திற்கு, காவல்துறை மூலமாகவோ அல்லது கோர்ட் மூலமாகவோதான் இந்த பிரச்னை அணுகப்பட்டிருக்க வேண்டும் என்கிற எளிய உண்மை  ஏன் புரியவில்லை?

வரதராஜனின் மரணம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான கட்டுரையில் கட்சித் தலைமை இப்படி சொல்லியிருக்கிறது: “அவரது வாழ்க்கையில் தனிமனித பலவீனங்களுக்கு இடம் கொடுத்தது, தவறான விஷயம். (அப்போது அப்படிப்பட்ட பலவீனங்களுக்கு மார்க்ஸ் இடம் கொடுத்ததையும், அதன் காரணமாக ஜென்னி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதையும் என்னவென்று சொல்வது?) அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆதாரபூர்வமாக சரிபார்க்கப்பட்டது.”

ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் செய்யவேண்டிய வேலையா இது?

பெண்ணியம் பற்றியும் பாலியல் விழுமியங்கள் பற்றியும் சி.பி.எம் உள்பட இடதுசாரி கட்சிகளின் பார்வை மிகவும் குறுகலாக இருப்பதற்கு பல உதாரணங்களை காட்டலாம். சமீபத்தில், கேரளாவில் தாக்கப்பட்ட எழுத்தாளர் பால் சக்காரியா ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் பெண்ணிய இயக்கமாக உருவெடுத்திருக்க வேண்டிய இந்தியாவில் பெண்ணிய இயக்கத்திற்கு தலைமையேற்றிருக்க வேண்டிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இன்னும் பாலியல் விழுமியங்கள் சார்ந்த, பெண்ணிய கருத்தியல்கள் சார்ந்த விஷயங்களில் தன்னை நிகழ்காலத்தோடு பொருத்திக் கொள்ளவும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதோடு மிகவும் இறுகிய, முற்போக்குவாதிகளால் நிராகரிக்கப்படும் விழுமியங்களை பிடித்துக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

கோடிகோடியாக பணம் குவித்ததாக கேரளாவில் பினராயி விஜயன் மீது குற்றசாட்டு எழுந்த போது கட்சி அவரை கடுமையாக பாதுகாத்தது. ஆனால் வரதராஜன் அவமானப்படுத்தப்படுகிறார்.

ஆக, சி.பி.எம்மைப் பொறுத்தவரை, பாலியல் உறவுகள் மட்டும்தான் ஒழுக்க வரையறக்குள் வரும். பிற எதுவுமே, பொதுவாழ்வைச் சார்ந்ததாக இருந்தாலும், ஒட்டுமொத்த சமூகத்தை பாதிப்பதாக இருந்தாலுங்கூட  ஒழுக்கம் தொடர்பானது அல்ல போலும். தனிமனித செயல்பாடுகளுக்கு, குறிப்பாக பாலியல் தொடர்பானவற்றிற்கே மேலதிக முக்கியத்துவம்.  இதைவிட பிற்போக்குத்தனமான அணுகுமுறை இருக்கமுடியுமா என்ன?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

அண்மையில் சென்னையில் நடந்த ஒரு கலந்தாய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், தலித் மக்கள் பிரச்சினையில் மாநில அரசின் அணுகுமுறை சரியில்லை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் போதுமான அளவு நடவடிக்கை எடுப்பதில்லை, அரசுப் பணிகளில் தலித்துகளுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை, அரசிடம் இது குறித்து சரியான புள்ளிவிவரம் இருப்பதாகவே தெரியவில்லை, தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக 8,000க்கும் மேற்பட்ட புகார்கள், மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் இன்னமும் தொடர்கிறது என்று சரமாரியாக குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசிவிட்டுப் போனார்கள். வழக்கம்போல தமிழக முதல்வருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

என்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறார்களே என்று புலம்பி மறுநாளே ஓர் அறிக்கை விட்டார், சார் என்னையடிக்கிறான் சார் என்ற ரீதியில் மத்திய அரசிடம் புகார் கூறப்போவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தனக்கு வேண்டாதவர்களிடமிருந்து பெற்ற தகவல்களை நம்பிவிட்டதாம் ஆணையம். தமிழ்நாட்டில் முற்றிலுமாக மலம் அள்ளுவதில், சாக்கடைகளை தூர்வாருவதில் மனிதர்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டதாம். தலித் மக்கள் நலனுக்காகவே அவர் எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாராம்.

தமிழ்நாட்டில் தலித்துகள் நிலை அனைவருக்கும் தெரியும். எப்படி வெள்ளைக்காரன் போய் காங்கிரஸ்காரன் சுரண்டத்தொடங்கினானோ அதே போல திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் பிராமணனை அகற்றிவிட்டு மேல் மற்றும் இடைநிலை பிராமணரல்லாதார் இப்போது கொட்டமடிக்கின்றனர். தலித் மக்கள் நிலை ஆங்காங்கே ஓரளவு மேம்பட்டிருந்தாலும் பொதுவாக அம்மக்கள் மீதான ஒடுக்குமுறை, கொடுமைகள் குறைவதாக இல்லை. இடைநிலை சாதியினரே தங்களின் அடிப்படையான வாக்குவங்கி என உறுதியாக நம்பும் திராவிடக்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதோடு சரி என்பது பலருக்கும் தெரியும். குறிப்பாக ஊடகங்களில் பணிபுரிவோர்க்கு. ஆனாலும் அவர்கள் முதல்வரின் அர்த்தமற்ற அளப்பரியை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.

அவரது அறிக்கையை அப்படியே பிரசுரித்த பத்திரிகைகள் மலம் அள்ள, சாக்கடை அடைப்பை நீக்க நகர சுத்தி தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்களா என்று தங்கள் நிருபர்கள் மூலம் தெரிந்து வெளியிடமுடியாதா என்ன? செய்யலாம், ஆனால் செய்வதில்லை – அரசு விளம்பரம் போய்விடுமே என்கிற அச்சம் ஒரு புறம், நமக்கென்ன, எப்படியிருந்தாலும் தலித் மக்கள் இப்படியே இருந்து பழகிவிட்டார்கள் என்ற அலட்சியம்.

நாள்தோறும் சென்னையில் பல இடங்களில் சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக இறக்கிவிடப்படும் தொழிலாளர்களை நாம் அனைவருமே பார்க்கிறோம், அவ்வாறு இறக்கிவிடப்படுவோர் நச்சுவாயுவினால் தாக்கப்பட்டு இறப்பதாக அவ்வப்போது நாளேடுகளே செய்தி வெளியிடுகின்றன, போதிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை இறக்கிவிடுவோர் தண்டிக்கப்படுவதாக வரலாறே கிடையாது, ஏன் என்று ஊடகங்களும் கேட்பதில்லை.

ஆணைய உறுப்பினர்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை. அவர்கள் காங்கிரஸ்காரர்கள். அருந்ததியர்க்கான உள் ஒதுக்கீட்டை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கெதிரானது என்று குறிப்பிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் தலித்துகள் நிலை குறித்து அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால் விமர்ச்னங்களை நேரடியாக எதிர்கொள்ள திராணியில்லாமல், என்னைப் பற்றியா, நான் தலித்துகளின் சம்பந்தி இல்லையா என்று முதல்வர் கூப்பாடு போட்டிருக்கிறார்.

ஆணையம் செய்தியாளர்களை சந்தித்த மாலையே விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் தாழ்த்தப் பட்டவர்க்காக செய்துவரும் அளப்பரிய பணிகளுக்காக அவரைப் பாராட்டி, தங்களிடம் விருதுபெறுமாறு இறைஞ்சினா. அவரும் பெரிய மனதுடன் ஒத்துக்கொண்டார்.

மகிழ்ச்சிக்கடலில் திளைத்தவாறே போராளிகள் தீட்டிய செய்தியறிக்கை இது –

தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010ஆம் ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்’ விருதினை வழங்குவதெனும் எமது முடிவுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மகிழ்வுடன் இசைவளித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளின் போது “அம்பேத்கர் சுடர்’, “பெரியார் ஒளி’, “அயோத்திதாசர் ஆதவன்’, “காயிதேமில்லத் பிறை’, “காமராசர் கதிர்’, “செம்மொழி ஞாயிறு’ என்னும் விருதுகளைப் பொற்கிழியுடன் சமூக நலத்தொண்டர்களுக்கு வழங்கி வருகிறோம். இத்தகைய விருதுகளில் அம்பேத்கர் சுடர் விருதினை இந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வழங்குவதில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமிதம் கொள்கிறோம்.

ஏப்ரல் 14ஆம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள மகத்தான பெருவிழாவில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுதொடர்பான இன்னொரு குறிப்பு. திமுக பொதுக்குழு கூடிய அன்று விமான நிலையச் சாலையில் வழிநெடுக அஞ்சாநெஞ்சன் அழகிரியை வாழ்த்தி பல சுவரொட்டிகள், பானர்கள். அதில் ஒன்று அவரை சே குவாரா என்று புகழ்ந்தது.

எனக்கு சிரிப்பு வரவில்லை. என்னைப்போல பலரும் நாமெல்லாம் எவ்வளவு கையாலாகதவர்களாகிவிட்டோம் என்று குமைந்திருக்கவேண்டும்.

எல்லோரும் பொய் சொல்லிக்கொண்டிருக்கும்போது உண்மைசொல்வதே புரட்சி என்றான் ஜார்ஜ் ஆர்வெல், இன்றைய காலகட்டத்தில் குமைவதே புரட்சியோ? வேதனைதான்.

இன வெறியைத் தூண்டும் ஊடகங்கள், இரையாகும் இளைஞர்கள்

பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் ஆகப்போகிறது. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் கதையாக, பிரபாகரன் புகைப்படத்தை அட்டையில் போட்டால் இதழ்கள் அதிகம் விற்கின்றன. ஆதாரமிருக்கிறதோ இல்லையோ விடுதலைப் புலிகளின் வீர தீர பராக்கிரமம் பற்றி ஏதாவது கதை சொன்னால், தமிழ் வாசகர்கள் ஆர்வமாக வாங்கிப்படிக்கிறார்கள்.
பிரபாகரன் தமிழின உணர்வின் குறியீடாகத் தொடர்கிறார். அவரது பங்களிப்பு பற்றி நடுநிலையான ஆய்வு இன்றைய தமிழ்ச் சூழலில் சாத்தியமானதாகவே தோன்றவில்லை.  ஏறத்தாழ அனைத்து தமிழ் இதழ்களும் பிரபாகரனுக்கு வாழ்த்துப் பா பாடியே தங்கள் இனப் பற்றைக் காட்டிக்கொள்கின்றன.
தமிழக அரசியல் என்றொரு வார ஏடு. வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. எல்லாம் ஜூனியர் விகடன் ஸ்டைல்தான். காரம் கூடுதல், நக்கீரன் அளவு முற்றிலும் பொறுப்பற்று, மஞ்சள் தரத்திற்கு போவதில்லை. அவ்வளவுதான்.
அந்த ஏட்டில் நடிகர் ஜெயராம் தன் வீட்டில் பணியாற்றும் பெண் குறித்து கூறிய கருத்து தொடர்பான கட்டுரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொம்பு சீவிவிடுவதில் இவர்கள்  நக்கீரனுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை.
ஒரு மலையாள சானலில் ஜெயராம் தமிழ்ப் பெண்களை இழிவாகக் கூறியதாகக்  கூறியதற்கு வறுத்தெடுத்திருந்தார்கள்.
கறுத்த, தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தன் வேலைக்காரியைப் பற்றி ஜெயராம்  கூறினாராம். இனத்துவேஷம், மொழித் துவேஷம், தண்டனைக்குரிய குற்றமாம். ஆனால் ஜெயராம் மன்னிப்புக் கேட்டுவிட்டதால், பிரச்சினை அத்தோடு விட்டுவிடப்பட்டதாம், வருந்துகிறார் கட்டுரையாளர்.
அதே நேரம்  “.., ஒரு நியாயமான காரணத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு ஜெயராம் வீட்டைத்தாக்கி, இனி தமிழனைக் கேலி செய்தால் உதை விழுமோ என்ற அச்சத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திய நாம் தமிழர் இயக்கத் தொண்டர்களை மட்டும் மறக்கவோ மன்னிக்கவோ” தமிழினத் தலைவரால் முடியவில்லையாம். தமிழனை யார் என்ன சொன்னாலும், தமிழனை அடக்கி, முடக்கி, தமிழனை இழிவுபடுத்துகிறவர்களைக் காக்கிற தாயாக விளங்குகிறாராம் கலைஞர். பொதுவாகவே மலையாளப்படங்களெல்லாம்  தமிழனை இழிவுபடுத்துவதாக பொய்ப் பிரச்சாரம் வேறு.
அப்புறம் நடிகர் அஜித்தின் மீதும் வசைபாடல். அண்மையில் ஓர் விழாவில், அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு நடிகர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என அஜித் நேரடியாகவே கருணாநிதியிடம் முறையிட்டது பற்றிக் குறிப்பிட்டு, அஜித் இலங்கைத் தமிழர் மற்றும் ஹொகேனக்கல் பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டங்களைப் பற்றித் தான் சொல்லுகிறார் என்ற முடிவுடன் குமுறுகிறார் அக்கட்டுரையாளர் ”தமிழை வைத்து சம்பாதித்தவர்கள், தமிழ்நாட்டில் தமிழோடும் தமிழனோடும் அராஜக விளையாட்டு விளையாட, அதைக் கண்டு களிப்பதே நமக்கு பிழைப்பாகிவிட்டது…என்ன பிழைப்போ…” என்று புலம்புகிறது கட்டுரை. சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு சொல்லும் அக்மார்க் விஷத்தில் தோய்த்தெடுக்கப்பட்டது.
பிரபாகரனின் மேல் ஒரு துரும்பு விழுந்தாலும் இங்கே ரத்த ஆறு ஓடும் என கர்ஜித்த வைகோவிற்கு தமிழினவாதம் ஒரு பிழைப்பு. தமிழக அரசியல் பத்திரிகை நடத்துபவரோ அதன் ஆசிரியரோ எந்த அளவு அந்த நீரோட்டத்தில் கலந்தவர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழா இன உணர்வு கொள் என்று உசுப்பேற்றிவிடுவது நல்ல வியாபார யுக்தி என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை மாபெரும் வீரர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரித்து திரைப்படம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய புகழேந்தி தங்கராஜ் இப்பத்திரிகையில் தொடர்ந்து சில பக்கங்கள் எழுதுகிறார்.
நடுத்தர வர்க்கத்தினர் ஐ.டி. கனவுகளில் மிதக்கிறார்கள் என்றால், அடித்தட்டு மக்கள் இலவசங்களில் தங்களை இழக்கிறார்கள். இன உணர்வென்பதெல்லாம் வெறும் மேடைப்பேச்சோடு நின்றுவிடுகிறது என்பது உண்மை.
இந்நிலையில் இப்படிச் செய்யப்படும் இன வெறிப் பிரச்சாரம் எதிர்கால சந்ததியினரின் ஒரு பகுதியினரை நிச்சயம் பாழ்படுத்தும். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின்  ஆபத்துக்களை உணராமல் அலட்சியமாக இருந்துவிட்ட இடதுசாரிகள், சிந்தனையாளர்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.